அஜித்தின் துணிவு படம் பாதியில் நிறுத்தம்... கடுப்பாகி பணத்தை திருப்பிக்கேட்டு ரசிகர்கள் வாக்குவாதம்
சென்னையில் உள்ள மால் ஒன்றில் துணிவு படம் பார்ப்பதற்காக டிக்கெட் புக் பண்ணிவிட்டு வந்த ரசிகர்கள் படம் பாதியில் நிறுத்தப்பட்டதால் பணத்தை திருப்பி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விஜய் - அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதேபோல் தான் வாரிசு மற்றும் துணிவு படங்கள் ரிலீசானபோதும் பல்வேறு சண்டைகளும், வேடிக்கையான நிகழ்வுகளும் அரங்கேறின. குறிப்பாக ஜனவரி 11-ந் தேதி இரண்டு படங்களும் ரிலீசானபோது சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் இருதரப்பு ரசிகர்களும் மோதிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த மோதலில் விஜய் - அஜித் பேனர்கள் கிழிக்கப்பட்டதோடு, தியேட்டர் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தி இருந்தனர். இதையடுத்து நிலைமை மோசமானதால், தடியடி நடத்தி அங்கிருந்த ரசிகர்களை போலீசார் விரட்டி அடித்தனர். அதுமட்டுமின்றி இந்த கொண்டாட்டத்தின் போது லாரியில் இருந்து கீழே விழுந்து அஜித் ரசிகர் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவமும் அரங்கேறியது.
இந்நிலையில், தற்போது வேடிக்கையான சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ள விஆர் மாலில், துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களும் திரையிடப்பட்டு உள்ளன. இந்த மாலில் அஜித்தின் துணிவு படம் பார்ப்பதற்காக டிக்கெட் புக் பண்ணிவிட்டு வந்த ரசிகர்கள் அப்படம் பாதியில் நிறுத்தப்பட்டதால் ஷாக் ஆகினர்.
இதையடுத்து அங்கிருந்த அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், தங்களுக்கு பணத்தை திருப்பித் தருமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக படம் பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன.