சிம்புவின் பர்த்டே ஸ்பெஷலாக வெளியானது ‘பத்து தல’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் - ‘நம்ம சத்தம்’ பாடல் வீடியோ இதோ
நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒபிலி கிருஷ்ணா இயக்கியுள்ள பத்து தல படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘நம்ம சத்தம்’ என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது.
சிம்பு நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் பத்து தல. சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஒபிலி என் கிருஷ்ணா இயக்கி உள்ளார். மஃப்டி என்கிற கன்னட படத்தை தழுவி எடுக்கப்படும் இப்படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டராக நடித்துள்ளார். அவருடன் நடிகர் கவுதம் கார்த்திக், நடிகை பிரியா பவானி சங்கர், இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஃபரூக் பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற மார்ச் 30-ந் தேதி இப்படத்தை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய உள்ளனர். தற்போது இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பத்து தல படத்தின் நாயகன் சிம்புவின் பிறந்தநாளான இன்று அப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. நம்ம சத்தம் என்கிற அப்பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடி இருக்கிறார். அப்பாடலின் லிரிக்கல் வீடியோவில் சிம்பு நடனமாடும் காட்சிகளும் இடம்பெற்று உள்ளன. ரசிகர்களை கவரும் விதமாக அமைந்துள்ள நம்ம சத்தம் பாடல் சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது.
அதுமட்டுமின்றி இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சிம்புவுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளனர்.