உசிலம்பட்டி பள்ளிக்கு வந்த நடிகை கத்ரீனாவை ‘அரபிக்குத்து’ ஆட வைத்த மதுரை டான்ஸ் மாஸ்டரின் நெகிழ்ச்சி பேட்டி
Katrina Kaif : உசிலம்பட்டி அருகே அமைந்துள்ள தனியார் பள்ளிக்கு திடீர் விசிட் அடித்த நடிகை கத்ரீனா கைஃப் அங்குள்ள குழந்தைகளுடன் நடனமாடி அசத்தினார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் அமைந்துள்ள தனியார் பள்ளிக்கு பங்குதாரராக உள்ளார் பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப். கடந்த சனிக்கிழமை அந்த பள்ளிக்கு வந்த கத்ரீனா அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நடத்திய கலை நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்த கத்ரீனா, பள்ளிக் குழந்தைகளுடன் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெறும் அரபிக்குத்து பாடலுக்கு உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை கத்ரீனாவுக்கு நடனத்தை சொல்லிக் கொடுத்த மதுரையைச் சேர்ந்த பிரபல நடன இயக்குனரும் 30க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களுக்கு நடனம் அமைத்துக் கொடுத்தவருமான டான்ஸ் மாஸ்டர் தனா தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து டான்ஸ் மாஸ்டர் தனா நம்மிடம் கூறுகையில்,"டான்ஸ் ஆட சொல்லிக் கொடுத்து குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்த அந்த பள்ளிக்கு சென்றிருந்தேன். அப்போது பிரபல நடிகை கத்ரீனா கைஃப் அங்கு வந்திருந்தது, எனக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு நடனம் சொல்லிக் கொடுக்க வாய்ப்பும் கிடைத்தது. அப்போது நடிகை கத்ரீனா மெதுவா டான்ஸ் சொல்லிக் கொடுங்க மாஸ்டர் என்றார். ஒவ்வொரு ஸ்டெப்பாக சொல்லிக் கொடுத்தேன். அதனை உடனே பிக் செய்து ஆடினார். இந்த மகிழ்ச்சியான தருணம் எனக்கு கிடைத்தது மிகப்பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது" என்றார்.