நமக்காக போராடி செத்த ஒருத்தன் இருக்கான்! உண்மை கதையில் ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ரெபல்' டீசர் வெளியீடு!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் உண்மை கதைக்களத்தில் நடித்துள்ள, 'ரெபல்' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
 

First Published Nov 11, 2023, 7:16 PM IST | Last Updated Nov 11, 2023, 7:16 PM IST

தேசிய விருதை வென்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரெபல்' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா அவருடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் 'ரெபல்' படத்தின் டீசர் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும்  திரைப்படம் 'ரெபல்'. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், 'கல்லூரி' வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை உதயா கவனிக்க, பட தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டிருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரில் கதையின் நாயகனான ஜீ.வி. பிரகாஷ் குமாரின் தோற்றமும், ஆவேசமான கதாபாத்திர குணாதிசயமும் ரசனையுடன் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது. இதன் காரணமாக 'ரெபல்' படத்தின் டீசர் குறுகிய கால அவகாசத்திற்குள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
 

Video Top Stories