அமானுஷ்யங்கள் நிறைந்த கடல் பயணம்; மிரள வைக்கும் ஜிவி பிரகாஷின் ‘கிங்ஸ்டன்’ டிரைலர்
ஜிவி பிரகாஷ் குமாரின் 25வது படமான கிங்ஸ்டன் திரைப்படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக அறிமுகமாகி 24 படங்கள் நடித்துவிட்டார். அவரின் 25வது படமாக கிங்ஸ்டன் உருவாகி இருக்கிறது. இப்படத்தை கமல் பிரகாஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக திவ்ய பாரதி நடித்துள்ளார். இப்படம் மார்ச் 7ந் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், அப்படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய எக்ஸ் தளம் வாயிலாக இன்று வெளியிட்டுள்ளார்.
அமானுஷ்யங்கள் நிறைந்த கடலில் காதலியுடன் பயணம் மேற்கொள்ளும் ஜிவி பிரகாஷ் என்ன ஆனார் என்பதே இப்படத்தின் மையக்கரு. இப்படத்தில் ஹீரோவாக நடித்து இசையமைத்துள்ளது மட்டுமின்றி இப்படத்தை தயாரித்தும் உள்ளார் ஜிவி பிரகாஷ் குமார். இப்படத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஎஃப் எக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாம். சுமார் ஓராண்டு காலம் அதற்காகவே செலவிட்டிருக்கிறார்கள்.
கிங்ஸ்டன் திரைப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் மீனவராக நடித்துள்ள இப்படத்தில் அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல், ஆண்டனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கலை இயக்குனராக மூர்த்தி பணியாற்றி இருக்கிறார். மேலும் ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயனும், படத்தொகுப்பாளராக ஷான் லோகேஷும் பணியாற்றி இருக்கிறார்கள். திகிலூட்டும் காட்சிகளுடன் வெளியாகி இருக்கும் அப்படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.