ரஜினி படத்துக்கு எதுக்கு விருது? எல்லாமே லாபி தான்... சர்ச்சையை கிளப்பிய இயக்குனர் அமீர்!
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக உள்ள அமீர், சர்ச்சைக்கு பஞ்சம் இல்லத வகையில் பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அமீர், இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து இயக்கிய 'பருத்திவீரன்' படத்திற்காக பல்வேறு விருதுகளை பெற்றார். இப்படத்தில் நடித்ததற்காக நடிகை ப்ரியா மணிக்கு தேசிய விருதும் கிடைத்தது.
இந்நிலையில் வரும் 24 ஆம் தேதி, ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள வெப் தொடரான 'செங்களம்' ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். சமீபத்தில் வழங்கப்பட்ட ஆஸ்கர் விருது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, அந்த நாட்டில் வழங்கப்படும் தேசிய விருதை போன்றது தான், ஆஸ்கர் விருது.
30 ஆண்டுகளுக்கு முன்பே சிறந்த விருதுகள் எல்லாம் கொடுத்து முடிக்கப்பட்டு விட்டன. இப்போது வழங்கப்படும் விருதுகள் எல்லாமே லாபி தான் என விமர்சனத்தை முன் வைத்தார். அதேபோல், இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகர் என்ற பிரிவில் ரஜினிகாந்துக்கு மாநில அரசின் விருது வழங்கப்பட்டது. இப்படத்தில் நடித்த ரஜினிகாந்தை சிறந்த நடிகர் என சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினார். ரஜினிகாந்த், ஒரு என்டர்டெயினர் அவ்வளவுதான். ஆனால் சிவாஜி படத்தில், சிறப்பு நடிப்பு இருந்ததா என்ற கேள்வியை முன் வைத்ததுடன்... ரஜினியின் சிறந்த நடிப்பு வெளிப்படுத்தப்பட்ட திரைப்படம் என்றால் முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, போன்ற படங்கள்தான். ஆனால் அப்படங்களுக்கு ஏன் தேசிய விருது கொடுக்கப்படவில்லை? என பரபரப்பாக பேசியுள்ளார்.