திருப்பதி கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த பிரபாஸ்... தொடர் தோல்வியில் இருந்து மீள வேண்டி பிரார்த்தனை

ஆதிபுருஷ் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படத்தின் நாயகன் பிரபாஸ் இன்று அதிகாலை திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

First Published Jun 6, 2023, 9:31 AM IST | Last Updated Jun 6, 2023, 9:31 AM IST

பாகுபலி படம் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்தவர் பிரபாஸ். பாகுபலி படத்துக்கு பின்னர் இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து தோல்வியை தழுவின. குறிப்பாக பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ராதே ஷியாம் திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் கண்டிப்பாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் பிரபாஸ்.

இந்த நிலையில், அவர் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் வருகிற ஜூன் 16-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் ராமராக நடித்துள்ளார் பிரபாஸ். இதில் அவருக்கு ஜோடியாக சீதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்து இருக்கிறார்.

ரூ.600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்ய உள்ளன. ஆதிபுருஷ் படத்தின் ரிலீசுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் அதன் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் திருப்பதியில் இன்று மாலை அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதற்காக திருப்பதி வந்துள்ள நடிகர் பிரபாஸ் இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவர் அதிகாலை சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை வழிபட்டார். இதையடுத்து பிரபாஸுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டன. பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த பிரபாஸை காண ரசிகர்கள் அதிகளவில் குவிந்து இருந்தனர். அவர்களைப் பார்த்து கையசைத்தபடி அங்கிருந்து கிளம்பிச் சென்றார் பிரபாஸ்.

Video Top Stories