'பிகில்' சர்ச்சை யாருக்கு ஆதரவு..! அரசுக்கா? விஜய்க்கா? போட்டு தாக்கும் மக்கள்..
பிகில் பட நிகழ்சியில், யார் யாரை எங்கெங்கு வைக்க வேண்டுமோ அவரவர்களை அங்கங்கு உட்கார வைக்க வேண்டும் என விஜய் பேசியது அதிமுகவினரை ஆத்திரப்படுத்தியது. இதனையடுத்து உயர்கல்வித்துறை சார்பாக விழா நடந்த சாய்ராம் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அத்தோடு அதிமுக அமைச்சர்களும் விஜயின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் நடித்த திரைப்படமான 'பிகில்' பட இசை வெளியீட்டு விழாவில், அரசுக்கு எதிராகவும், அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் விஜய், பேசியது தற்போது தமிழகத்தில் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக வெளியில் எங்கு வந்தாலும் பேசாத விஜய், படவிழாக்களில் மட்டும் இப்படி தன்னுடைய உணர்ச்சிவசமான பேச்சை அல்லி விடுவதாகவும், அரசியல் தலைவர்களை தாக்குவதாகவும், பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.
ஏற்கனவே 'சர்க்கார்' பட விழாவிலும் விஜய் இதே போல் பேசி இருந்ததும் ஒரு காரணம் என்று கூறலாம். விஜயின் கார சாரமான பேச்சுக்கு ரசிகர்கள் முழு ஆதரவு தெரிவித்த போதிலும், மக்கள் சிலர் அரசியலுக்கு, விஜய் அடி போடுவதாகவே சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்ததை பார்க்க முடிந்தது.
மேலும், இன்று 'பிகில்' இசை வெளியீட்டு விழா நடைபெற்ற கல்லூரிக்கு, பட விழாக்கள் நடத்த ஏன் அனுமதி கொடுக்கப்பட்டது என கூறி, இசை வெளியீட்டு விழா நடைபெற்ற 'சாய் ராம்' கல்லூரிக்கு உயர்கல்வி துறை அதற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதில் மக்களின் ஆதரவு அரசுக்கா? அல்லது விஜய்க்கு என்பதை தெரிந்து கொள்ள ஏசியாநெட் மக்களிடம் கருத்துகளை எடுக்க முனைத்தோம். அப்போது சிலர் விஜய் பேசியதில் எந்த ஒரு தவறும் இல்லை என்று கூறினார். அதே போல் சிலர், விஜய் அரசியலுக்கு வருவதற்காக இப்படி பேசியது போல் தோன்றினாலும், அவர் ஒரு நடிகராக இருந்து கொண்டே மக்களுக்கு உதவி செய்யலாம் என கூறினர். ஒட்டு மொத்தத்தில் அரசை விட விஜய்க்கே அதிக ஆதரவு மக்கள் மத்தியில் இருந்ததை பார்க்க முடிந்தது.