லியோ திரைப்படம் வெற்றிபெற வேண்டி திருச்செந்தூரில் ரசிகர்கள் பாலாபிஷேம்; ரூ.1 லட்சத்தில் உதவி பொருட்கள்
நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வெற்றி பெற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பாலபிஷேகம் செய்து முதல் காட்சி டிக்கெட்டை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. காலை 9 மணிக்கு ரசிகர்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் திருச்செந்தூர் ஒன்றிய தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் லியோ படம் வெற்றி பெற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
மேலும் முதல் காட்சி டிக்கெட்டை வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதனையடுத்து திருச்செந்தூர் கிருஷ்ணா திரையரங்கில் ஏழை, எளியோருக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் 200 பெண்களுக்கு சேலை, இரண்டு தையல் இயந்திரம், ஒரு இஸ்திரி பெட்டி வழங்கப்பட்டது. கிருஷ்ணா திரையரங்கில் ரசிகர்கள் காட்சிக்கு முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபட அனுமதிக்காததால், ரசிகர்கள் எந்த ஒரு கொண்டாட்டத்திலும் ஈடுபடாமல் அமைதியான முறையில் படத்தை பார்த்துச் சென்றனர்.