
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, காவிரி நீர் விவகாரம் : தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தெலங்கானா முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன், காவிரி நதிநீர் விவகாரம், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை மற்றும் திருச்செந்தூர் சூரசம்ஹார விழா ஏற்பாடுகள் குறித்துத் தனது கருத்துகளைப் பதிவு செய்தார். காவிரி விவகாரம் குறித்துப் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு இரு மாநில உரிமைகளும் பாதுகாக்கப்படுவதாகத் தெரிவித்தார். கர்நாடக காங்கிரஸ் அரசு மேகதாது அணை கட்டுவோம் எனக் கூறி வரும் நிலையில், தமிழகத்திற்குத் தண்ணீர் பெற்றுத் தர முடியாவிட்டால் தமிழக அமைச்சரவையில் உள்ள இரண்டு காங்கிரஸ் அமைச்சர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், டெல்லியில் சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் தமிழக முதலமைச்சர், கர்நாடக ஆளும் கட்சியின் தலைவர்களிடம் மேகதாது அணையைக் கட்டக் கூடாது எனவும், காவிரி நீரைத் திறந்துவிடவும் முதலில் கோரிக்கை வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.