
எந்த மிரட்டலுக்கும் பணியக்கூடியவர் கே.என். நேரு இல்லை - திருமண விழாவில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு
சென்னையில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் - சங்கரி ஆகியோரின் மகன் விஷால் நாராயணன் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த ஜெகதீஷ் பாட்டில் - அனுபமா ஆகியோரின் மகள் ரிஷா பாட்டில் ஆகியோரின் சுயமரியாதைத் திருமண விழா, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். விழாவில் வாழ்த்துரை வழங்கிய திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி, கட்சிப் பணிகள், மாநாடுகள் மற்றும் தேர்தல் பணிகளை மிகத் திறமையாகக் கையாளக்கூடியவர் கே.என். நேரு என்பதால், திமுக அல்லாத கட்சிகள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அவருக்குச் 'சிறப்புக் கவனிப்பு' அளிக்கப்படுவதாகவும், தற்போது வாரத்திற்கு ஒருமுறை அவரது வீட்டில் சோதனைகள் (Raid) நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார். எத்தகைய மிரட்டலுக்கும் பணியக்கூடியவர் கே.என். நேரு இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய கனிமொழி, கே.என். நேருவையும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் எப்படிப் பிரிக்க முடியாதோ, அதேபோன்று மணமக்களின் மணவாழ்க்கையும் உறுதியோடும் அன்போடும் நிலைத்திருக்க வேண்டும் என வாழ்த்தினார்.