
டாஸ்மாக்கில் ₹10 விலை உயர்த்தப்படவில்லை...! - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!
டாஸ்மாக் மதுபாட்டில்களின் விலை ₹10 உயர்த்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்குத் தமிழ்நாடு அமைச்சர் கே. விக்னேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். முந்தைய ஆட்சிக் காலத்தில் காலி பாட்டில்களைத் திரும்பப் பெற தனியாக பெறப்பட்ட ₹10 வைப்புத் தொகை, அரசு கணக்கில் வராமல் முறைகேடுகளுக்கு வழிவகுத்ததாகக் குறிப்பிட்ட அவர், அந்தப் பணத்தை அரசு கஜானாவிற்கு நேரடியாகக் கொண்டு வரும் நோக்கிலேயே அது தற்போது MRP தொகையுடன் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மதுப்பிரியர்கள் காலி பாட்டில்களைச் சில்லறை விற்பனைக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும் போது, அந்த ₹10 தொகை முழுமையாக அவர்களுக்கே திரும்ப வழங்கப்படும் என்றும், இதில் புதியதாக விலை உயர்வு எதுவும் செய்யப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், செய்திகளின் உண்மைத்தன்மையை அறியாமல் எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.