
மது இல்லா தமிழகம்
தமிழ்நாட்டில் மது பழக்கத்தை ஒழிக்கும் வகையில் பாமக சட்டமன்ற உறுப்பினரும், பசுமை தாயகம் அமைப்பின் தலைவருமான சௌமியா அன்புமணி "மது இல்லா தமிழகம்" (Liquor Free Tamil Nadu) என்ற புதிய விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "மாநிலம் முழுவதும் அனைத்துக் கிராமங்களிலும், நகரங்களிலும் மதுப் பழக்கம் அதிகரித்துள்ளது பேரதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையேயும்,இளைஞர்களிடையேயும் மதுப் பயன்பாடு அதிகரித்து வருவதால், அவர்களின் எதிர்காலமும், குடும்பங்களின் அமைதியும் சீரழிகிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக மது ஒழிப்பிற்கான தெளிவான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்; படிப்படியாகத் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து, மறுவாழ்வு மையங்களை அதிகரித்து, பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார். மேலும், இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.