
விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு... கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது! - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தற்போதைய ஆட்சியில் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்த்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சிக் காலத்தில் விலைவாசியைக் கட்டுப்படுத்த 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வெளிமாநிலங்களில் இருந்து கூட்டுறவுத் துறை மூலம் அத்தியாவசியப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டதை நினைவூட்டினார். ஆனால், தற்போதைய அரசு எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சாடிய அவர், மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்வெட்டுப் பிரச்சனைகள் குறித்தும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.