
கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் முதலமைச்சர் மௌனம் ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி !
சென்னையில் தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் ராம் மாதவ் மற்றும் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ராம் மாதவ், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டினார். தாங்கள் வெற்றி பெற்றால் தேர்தல் நியாயமாக நடந்ததாகவும், பாஜக வெற்றி பெற்றால் முறைகேடு நடந்ததாகவும் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாகக் கூறிய அவர், தமிழகத்தில் தவெக வெற்றி பெற்றதை மக்கள் தீர்ப்பாக ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் தவெக தங்கள் அரசியல் எதிரி என்பதால் களத்தில் எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முந்தைய திமுக ஆட்சிக்கும் தற்போதைய தமிழக வெற்றிக் கழக (TVK) ஆட்சிக்கும் எந்த விதமான வித்தியாசமும் இல்லை என்றும், மாநிலத்தில் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் விமர்சித்தார். கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் மௌனம் சாதிப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பிய அவர், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்குவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், நிலையற்ற நிர்வாகத்தால் தமிழகத்தின் ஜிஎஸ்டி வரி வருவாய் வளர்ச்சி மைனஸ் 5 சதவீதமாகச் சரிந்துள்ளதாகவும், ரூ.15,000 கோடி மதிப்பிலான தொழிற்சாலைகள் ஆந்திராவிற்குச் சென்றுவிட்டதாகவும் முதலமைச்சர் விஜய் மீது அவர் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.