
மேகதாது விவகாரம் : கர்நாடகாவின் கனவு பலிக்காது - துரைமுருகன் அதிரடி பேட்டி!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், மேகதாது அணை விவகாரம் மற்றும் தமிழக அரசியல் சூழல் குறித்துத் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். காவிரி போன்ற மாநிலங்களுக்கு இடையேயான நதியில், கீழ்ப்பகுதி மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக அரசால் ஒரு பக்கெட் தண்ணீரைக் கூடத் தேக்கி வைக்கவோ அல்லது தன்னிச்சையாக அணை கட்டவோ முடியாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய நீர்வள ஆணையம், மத்திய அரசு மற்றும் சுற்றுச்சூழல் துறை எனப் பல்வேறு சட்டப்பூர்வ நடைமுறைகளையும் அனுமதிகளையும் தாண்ட வேண்டியுள்ளதால், கர்நாடகாவின் முயற்சி சாத்தியமற்றது என அவர் குறிப்பிட்டார். மேலும், தமிழகச் சட்டம்-ஒழுங்கு குறித்து மத்திய அரசு ஆளுநரிடம் அறிக்கை கேட்டிருப்பது தொடர்பான கேள்விக்கு, "அது குறித்து ஆளுநரிடமே கேட்க வேண்டும்" என அவர் பதிலளித்தார்.