Asianet News TamilAsianet News Tamil

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் “நம்மாழ்வார் மோட்சம்” ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் ராப்பத்து நிகழ்ச்சியின் சிறப்பான நம்மாழ்வார் மோட்சம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீ வில்லிபுத்தூர் 108 வைணவத் திருத்தலங்களில் முக்கியமான திருத்தலமாகும். இங்கு மார்கழி மாதத்தில் 'பகல் பத்து', 'ராப்பத்து' உற்சவம் சிறப்பாக நடைபெறும், கடந்த 2ம் தேதி முதல் 'ராப்பத்து' உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.  இராப்பத்தின் ஒவ்வொருநாளும் பரமபத வாசல் வழியாக எழுந்தருளும் நம்மாழ்வார் சரணாகதியின் மூலம் எம்பெருமான் திருவடி அடைகின்றார். பின் உலகில் உள்ளோர் எல்லோரும் தாங்கள் உய்ய ஆழ்வாரை இந்த நானிலத்திற்கு தந்தருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய, அவ்வாறே பெருமாள் அனுகிரகிக்க நம்மாழ்வாரை திருப்பி தருவதாக ஐதீகம்.  

இதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 'ராப்பத்து' உற்சவத்தின் பத்தாம் நாளான இன்று அதிகாலை நம்மாழ்வார் மோட்சம் நடைபெற்றது. அரையர் அருளப்பாட, பட்டர்கள் நம்மாழ்வாரை குழந்தையைப் போல கைத்தல சேவையால் கையில் தாங்கிச் சென்று  ஆழ்வாரை பெருமாளின் திருப்பாத கமலங்களிலே சேர்ப்பித்து சிறிது சிறிதாக திருத்துழாயினால் ஆழ்வார் முழுதும் மறையும் வண்ணம் சூடுகிறனர். சாம்பிராணி புகையால் பெருமாளும் ஆழ்வாரும் மறைக்கப்படுகின்றார். இவ் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் மனமுருக தரிசனம் செய்தனர்.

Video Top Stories