எழுத்தாளர் கி. ராஜநாராயணனுக்கு திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கம்… திறந்து வைத்தர் மு.க.ஸ்டாலின்!!
கோவில்பட்டியில் முன்னோடி எழுத்தாளர் கி. ராஜநாராயணனுக்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முழு திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கோவில்பட்டியில் முன்னோடி எழுத்தாளர் கி. ராஜநாராயணனுக்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முழு திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுக்குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (2.12.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கரிசல் காட்டு இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு 1 கோடியே 50 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முழு திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டில் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் திரு.ஸ்ரீகிருஷ்ண இராமனுஜம் – திருமதி லட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மகனாக 16.9.1922 அன்று பிறந்தார். பள்ளிப்பருவ கல்வியை மட்டுமே முடித்திருந்த கி.ராஜநாராயணன் பேச்சுத்தமிழில் மண்மணமிக்க சிறுகதைகளை படைத்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் புதிதாக 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய தகவல்
அவரது படைப்புகளில் கரிசல் நிலவியலும், வெள்ளந்தித்தனமும், பேரன்புமிக்க மக்களின் வாழ்வும் இடம்பெற்றிருந்தன. கி.ராஜநாராயணன் கரிசல் வட்டார அகராதியை உருவாக்கிய முன்னோடியாக திகழ்ந்தார். கரிசல் கதைகள், கதவு, பெண் கதைகள், கிராமியக் கதைகள் போன்ற எண்ணற்ற சிறுகதைகளையும், கிடை, பிஞ்சுகள் போன்ற குறுநாவல்களையும், கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், அந்தமான் நாயக்கர் போன்ற நாவல்களையும், எண்ணற்ற கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 1991-ஆம் ஆண்டு கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார். கி.ராஜநாராயணனுக்கு இலக்கிய சிந்தனை விருது, தமிழ்நாடு அரசின் விருது, மனோன்மணியம் சுந்தரனார் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாவல்கள் மூலம் எண்ணற்றோர் இதயங்களில் வாழ்ந்த கி.ராஜநாராயணன் 17.05.2021 அன்று மறைந்தார்.
இதையும் படிங்க: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு…. விசாரணை 2023 ஜனவரிக்கு ஒத்திவைப்பு!!
தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் நினைவினைப் போற்றும் வகையில், அவர் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்றும், அவரது படைப்பாளுமையை வெளிப்படுத்தும் வகையிலும், அவருடைய புகைப்படங்கள், படைப்புகள் ஆகியவற்றை மாணவர்களும், பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையிலும் ஓர் அரங்கம் நிறுவப்படும் என்றும், கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த பிதாமகர் கி.ரா.அவர்களுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என்றும் 18.5.2021 அன்று தமிழக முதல்வர் அறிவித்தார்.
இதையும் படிங்க: தங்கப்பதக்கம் வென்று தந்தையை இழந்த வீராங்கனை லோகப்பிரியா.. கலங்கிய டிடிவி.தினகரன்..!
அதன்படி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், இடைசெவல் ஊராட்சியில், கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணனின் நினைவாக அவர் பயின்ற இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கட்டடம் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு முதல்வர் மு.கஸ்டாலினால் 11.10.2022 அன்று திறந்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கோவில்பட்டியில், 220 சதுர மீட்டர் பரப்பளவில் 1 கோடியே 50 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முழு திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். இந்நினைவரங்கத்தில் நூலகம், நிர்வாக அலுவலகம், மின்னணு நூலகம், கண்காட்சி அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.