இந்த 6 மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை! தயாராக இருங்க! முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.

Heavy rain warning in Delta districts! CM Stlin order tvk

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து கனமழையினை எதிர்கொள்ள டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் காணொலிக் காட்சி வாயிலாக மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர்.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மாவட்ட நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து ஆயத்த நடவடிக்கைகளை இந்திய ஆட்சிப் பணி நிலையிலான மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: நெருங்கும் புயல் சின்னம்.! ஒருவருக்கு இத்தனை பால் பாக்கெட் மட்டுமே- ஆவின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இக்கூட்டத்தின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் அதிகனமழை எச்சரிக்கை வரப்பெற்ற மாவட்டங்களான மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களுடன் காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு அம்மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த மாவட்டங்களில் போதுமான நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதோடு, பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளுக்கென பல்துறை மண்டலக் குழுக்கள், மருத்துவக் குழுக்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் கண்டறியப்பட்டு தயார் நிலையில் உள்ளன என்று இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக, அதிக மழைபொழிவினை பெற்றுவரும் நாகப்பட்டினம் மாவட்டத்தில், 125 JCB இயந்திரங்கள், 75 படகுகள், 250 ஜெனரேட்டர்கள், 281 மர அறுப்பான்கள்; கடலூர் மாவட்டத்தில் 242 JCB இயந்திரங்கள், 51 படகுகள், 28 ஜெனரேட்டர்கள், 104 மர அறுப்பான்கள், 58 மோட்டார் பம்புகள்; மயிலாடுதுறை மாவட்டத்தில், 85 JCB இயந்திரங்கள், 70 படகுகள், 164 ஜெனரேட்டர்கள், 57 மர அறுப்பான்கள், 34 மோட்டார் பம்புகள்; திருவாரூர் மாவட்டத்தில் 125 JCB இயந்திரங்கள், 18 படகுகள், 142 ஜெனரேட்டர்கள், 73 மர அறுப்பான்கள், 18 மோட்டார் பம்புகள்; தஞ்சாவூர் மாவட்டத்தில் 59 JCB இயந்திரங்கள், 29 படகுகள், 69 ஜெனரேட்டர்கள், 711 மர அறுப்பான்கள், 42 மோட்டார் பம்புகள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி முன்னெச்சரிக்கையாக திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்பு படை குழுவும், மாநில பேரிடர் மீட்புப் படை குழுவும் விரைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 2 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவும் விரைந்துள்ளது. மேலும், மேற்படி மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு முதல்நிலை மீட்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இதையும் படிங்க:  சென்னைக்கு டேஞ்சர் அலர்ட்; புயலுக்கு பெயரும் வச்சாச்சு!

ஏற்கெனவே, மீனவர்கள் கடலுக்கு செல்வதை தடுக்க அறிவுரை வழங்கப்பட்டு பெரும்பான்மை படகுகள் கரை திரும்பியுள்ளன. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள படகுகள் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு செல்ல நவீன தொலைத்தொடர்பு சாதனங்களுடன் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் பல்துறை அலுவலர்களுடன் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிவாரண முகாம்களை அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், கனமழையின் போது பொதுமக்களை தாழ்வான பகுதிகளிலிருந்து முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வரவேண்டும் என்றும், வெள்ளநீர் தேங்கி பயிர்கள் சேதமடையாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், மின்சார வசதி தடையின்றி கிடைத்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios