- Home
- Tamil Nadu News
- மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிக்கு வரத் தேவையில்லை.. வீடு தேடி வரும் குழு.. சூப்பர் அறிவிப்பு!
மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிக்கு வரத் தேவையில்லை.. வீடு தேடி வரும் குழு.. சூப்பர் அறிவிப்பு!
தேர்தல் நாள் செய்திக் சேகரிப்பிற்காக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களும் இனி தபால் வாக்குகள் செலுத்தலாம் என தேர்தல் ஆனையம் அறிவித்துள்ளது.

மூத்த குடிமக்களுக்கு குட்நியூஸ்
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிக்கு வரத் தேவையில்லை. வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 60(c)-ன் படி, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் (PwDs) என அடையாளப்படுத்தப்பட்டவர்கள் தபால் வாக்கு மூலம் தங்கள் வாக்கைச் செலுத்தலாம்.
இத்தகைய வாக்காளர்கள் படிவம் 12D (Form 12 D)-ஐப் பயன்படுத்தி, தேர்தல் அறிவிக்கை வெளியான 5 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட BLO (வாக்குச்சாவடி நிலை அலுவலர்) மூலம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் (RO) சமர்ப்பிக்க வேண்டும்.
வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம்
வாக்குச் சேகரிக்கும் குழுக்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகளைச் சேகரிப்பார்கள். இதற்கான கால அட்டவணை தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தயாரிக்கப்பட்டு வேட்பாளர்களுக்கும் பகிரப்படும். தேர்தல் தேதியன்று அத்தியாவசியப் பணிகளில் (Essential services) இருக்கும் வாக்காளர்கள், தங்கள் துறையின் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் (Nodal Officer) மூலம் தபால் வாக்கு வசதிக்கு விண்ணப்பிக்கலாம்.
இவர்களும் இனிமேல் தபால் வாக்கு செலுத்தலாம்
தீயணைப்புத் துறை, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, ஆம்புலன்ஸ் சேவைகள், விமான போக்குவரத்து, அரசு சாலைப் போக்குவரத்துக் கழகங்கள் போன்றவை இந்த வசதியின் கீழ் வருகின்றன.தேர்தல் நாள் செய்திக் சேகரிப்பிற்காக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களும் அத்தியாவசியப் பணிகளில் உள்ள 'வராத வாக்காளர்கள்' பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர், அவர்களும் தபால் வாக்கு வசதிக்குத் தகுதியுடையவர்கள்.
தபால் வாக்குகள் மின்னணு முறையில்
தேர்தல் பணியில் இருக்கும் ஒரு வாக்காளர் தனது தபால் வாக்கைப் பெற்று, அதில் தனது வாக்கை பதிவு செய்து, வசதி மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வசதி மையத்தில் வாக்காளர் முழுமையான ரகசியத்துடன் வாக்களிப்பதை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
சேவை வாக்காளர்களுக்கு (Service voters) தபால் வாக்குகள் மின்னணு முறையில் அனுப்பப்படும். வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் இவை அனுப்பப்படும். இதற்கான தபால் செலவை சேவை வாக்காளர்கள் ஏற்க வேண்டியதில்லை. பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் நாளான மே 4, 2026 அன்று காலை 8:00 மணிக்குள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களை (ROs) சென்றடைய வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

