ஐந்து நாளாகியும் வடியாத வெள்ளநீர்; எப்போது வீட்டுக்கு போவோம் என்று பரிதவிக்கும் 60 கிராம மக்கள்...
கன்னியாகுமரியில் உள்ள 60 கிராமங்களில் ஐந்து நாளாகியும் வெள்ளநீர் இன்னமும் வடியவில்லை. முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இக்கிராமத்து மக்கள் எப்போது வீட்டுக்கு போவோம்? என்று பரிதவிக்கின்றனர்.
கன்னியாகுமரியில் உள்ள 60 கிராமங்களில் ஐந்து நாளாகியும் வெள்ளநீர் இன்னமும் வடியவில்லை. முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இக்கிராமத்து மக்கள் எப்போது வீட்டுக்கு போவோம்? என்று பரிதவிக்கின்றனர்.
கடந்த ஒரு வாரமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வந்தது. மலையோரப் பகுதிகளிலும் மழைக் கொட்டித் தீர்த்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் எக்கச்சக்கமாய் உயர்ந்தது.
இதனைத் தொடர்ந்து பெருஞ்சாணி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் தாமிரபரணி, பரளி ஆறு, கோதை ஆறு போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கரையோர கிராமங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின.
அதன்படி, 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு வசித்த மக்கள் அனைவரும் மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று மழையின் அளவு சற்றே குறைந்ததால் ஆற்றில் வெள்ளப் பெருக்கும் குறைந்து காணப்பட்டது.
மாங்காடு, வாவறை, ஏழுதேசம் போன்ற ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் வடிய தொடங்கியதால் அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் முகாம்களை விட்டு வெளியேறி தங்களின் வீடுகளுக்கு திரும்பினர். சேறும், சகதியுமாக காட்சியளித்த தங்கள் வீடுகளையும், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் நாசமானதையும் பார்த்த மக்கள் சோகம் அடைந்தனர்.
பின்னர், சோகத்தை ஓரங்கட்டிவிட்டு வீடுகளைச் சுத்தம் செய்யும் பணியில் இறங்கினர். இங்கு மின்சார இணைப்பும் சரிசெய்யப்பட்டு வருகிறது.
ஆனால், வைக்கல்லூர், மரப்பாலம், பருத்திக்கடவு ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீர் இன்னும் வடியவில்லை. வீடுகளுக்குள்ளும் நீர் அப்படியே உள்ளது. ஐந்தாவது நாளாக முகாம்களில் தங்கியிருக்கும் சுமார் 60 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லமுடியவில்லையே என்று புலம்புகின்றனர்.
இவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் இங்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தாலும் தங்களது வீடுகள் என்னவானதோ? என்ற நினைப்புதான் இவர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது என்று பரிதவிக்கின்றனர். 'ஐ மிஸ் மை ஹோம்' என்று சொல்லாமல் சொல்கின்றனர் இந்த கிராமத்து மக்கள்.
மாமுகம், இஞ்சிப்பறம்பு போன்ற பகுதிகளின் சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால், இப்பகுதிகளில் போக்குவரத்து முழுவதும் முடங்கி உள்ளது. வைக்கல்லூர் பகுதியிலுள்ள வயல்களில் தண்ணீர் புகுந்துள்ளது. அங்கேயே தேங்கியிருக்கும் தண்ணீரில் வாழை, நெல் போன்ற பயிர்களும் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளன.