திமுகவில் இணைந்த தங்க தமிழ்செல்வனுக்கு திமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக தங்க தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

அமமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இருந்து விலகி திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி திமுகவில் இணைந்தார். 

அமமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற செந்தில் பாலாஜிக்கு திமுக மாவட்டப்பொறுப்பாளர் பதவியுடன் அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் சீட் கொடுத்து வெற்றி பெற வைத்து எம்.எல்.ஏ.,வாக உயர்த்தியது. அதேபோல் தங்க. தமிழ்செல்வனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டரை மாதங்களாகியும் தங்க தமிழ்செல்வனுக்கு திமுக தலைமை எந்தப்பதவியையும் வழங்கவில்லை. 

இதனால், அமைதி காத்து வந்தார் தங்க.தமிழ்செல்வன். ஆனால் இன்று திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோர் திமுக கொள்கைபரப்பு செயலாளராக உள்ள நிலையில் 3 வதாக தங்க தமிழ்செல்வன் திமுக கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த வி.பி.கலைராஜன் திமுக இலக்கிய அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  நெசவாளர் அணி செயலாளராக கே.எம்.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.