என்னை டார்கெட் செய்கிறாங்க.. 4 கோடிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை- அலறும் நயினார் நாகேந்திரன்
நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி போலீசார் இரண்டாவது முறையாக பாஜக நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அளித்துள்ளனர்.
நெல்லை ரயிலில் 4 கோடி பணம்
இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கு முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது சென்னையில் இருந்து நெல்லைக்கு கட்டுக்கட்டாக பணம் கொண்டு செல்லப்படுவதாக ரகசிய தகவல் பறக்கும் படையினருக்கு கிடைத்தது. இதனையடுத்து போலீசார் திடீர் சோதனை மேற்கொண்ட போது முன்பதிவு செய்யப்பட்ட ரயிலில் இருந்த சதீஷ் (வயது 33) நவீன் (வயது 31) பெருமாள் (வயது 25) ஆகிய 3 பேரிடம் இருந்து 3 பெட்டியில் கட்டுக்கட்டாக 4 கோடி ரூபாய் பணம் இருந்தது கண்டறியப்பட்டது.
நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்
இதனையடுத்து போலீசார் 3 பேரிடம் விசாரணை நடத்தியதில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஓட்டலில் வேலை செய்வதாகவும் இந்த பணம் தேர்தல் செலவுக்காக அவர் எடுத்து வர சொன்னதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர் . இதனை தொடர்ந்து 4 கோடி ரூபாய் பணம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும் படி தாம்பரம் போலீசார் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அளித்திருந்தனர். ஆனால் விசாரணைக்கு ஆஜராகமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்தநிலையில் இன்று காலை தாம்பரம் போலீசார் நயினார் நாகேந்திரனை சந்தித்து சம்மன் அளித்துள்ளனர்.
என்னை டார்கெட் செய்றாங்க..
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், மே 2ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக இருப்பதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட 4 கோடி ரூபாய் என்னுடைய பணம் இல்லையென கூறினார். எங்கையோ பறிமுதல் செய்யப்ப்ட்ட பணத்தை என்னுடன் தொடர்பு படுத்துவதாகவும் கூறினார். தமிழகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கு மேல் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் 4 கோடியை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறி இந்த விஷயத்தில் நான் டார்கெட் செய்யப்படுவதாகவும், இதனை அரசியல் சூழ்ச்சியாக பார்க்கப்படுவதாக நயினார் நாகேந்திரன் கூறினார்.