கடந்த வாரம் ஈரான் மீது அமெரிக்க படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானி உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இது ஈரான் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காசிம் சுலைமானியின் இறுதிச்சடங்கில் பல்லாயிரக்கண மக்கள் திரண்டனர். இந்த நிலையில் தற்போது இரு நாடுகளுமிடையே போர் பதற்றம் நீடிக்கிறது.

காசிம் சுலைமானி கொலைக்கு பழிவாங்கும் விதமாக அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அதில் 80 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் ஈரான் தெரிவித்தது. ஆனால் அதை மறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் யாரும் பலியாகவில்லை எனவும் ராணுவ தளவாடங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் கூறியிருக்கிறார். இந்தநிலையில் பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதுரகம் அருகே நேற்று இரண்டு ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதை நடத்தியது ஈரான் தானா? என்பது குறித்து தெரியவில்லை.

தாக்குதல் தொடர்பான காணொளிகள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தநிலையில் அல் அசாத் தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு முன்பும் பின்புமான படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் அமெரிக்க ஆயுத தளவாடங்கள் பலத்த சேதமடைந்திருப்பதாக பிளானட் லாப்ஸ் என்னும் அமைப்பு கூறியுள்ளது.