குடிபோதையில் தகராறு; பெற்ற மகன் என்றும் பாராமல் தந்தை செய்த கொடூர செயல் - கோவையில் பயங்கரம்
கோவையில் குடிபோதையில் தகராறு செய்த மகனை தந்தையே குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை பேரூர் அருகே கரடிமடை பகுதியைச் சேர்ந்தவர் மாயன் (வயது 45). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். மனைவி முத்தம்மாள் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு முகேஷ் (21), முத்துக்குமார் (19) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாயன் மாலை ஆடு மேய்த்து விட்டு வீட்டிற்கு வந்து உள்ளார்.
இரவு சுமார் 8.30 மணிக்கு மாயன் அவரது மனைவி முத்தம்மாள் இரண்டாவது மகன் முத்துக்குமார் ஆகியோர் வீட்டில் இருந்து உள்ளனர். அப்பொழுது மாயன் முட்டை வறுத்துக் கொண்டு இருக்கும் பொழுது மூத்த மகன் முகேஷ் குடிபோதையில் வீட்டிற்கு வந்து உடனே வீட்டின் வெளியே இருந்த பாத்திரத்தை எடுத்து மாயனின் தலையில் ஓங்கி அடித்து உள்ளார். இதனால் தந்தை, மகன் இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளது.
கையில வச்ச மையே அழியல; அதுக்குள்ள ஓட்ட காணும்னு போராட்டமா? கோவையில் வசமாக சிக்கிய பாஜகவினர்
இதில் ஆத்திரமடைந்த மாயன் தனது மகனை தாக்கி உள்ளார். மனைவி முத்தம்மாள் இருவரையும் தடுத்து உள்ளார். மனைவி முத்தம்மாள் வெங்காயம் வெட்ட வைத்து இருந்த சிறிய கத்தியால் மாயன் தனது மகன் முகேஷின் இடது கழுத்து மற்றும் முதுகு, கால் பகுதியில் குத்தி உள்ளார். வலி தாங்க முடியாமல் மகன் கீழே விழுந்து துடித்து உள்ளார். பின்னர் இருசக்கர வாகனத்தில் அவரது தம்பி முத்துக்குமார் தனது நண்பர்களுடன் சிகிச்சைக்காக தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்று அனுமதித்தனர். இந்நிலையில் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் முகேஷ் உயிரிழந்தார். இதை அடுத்து கத்தியால் குத்திய தந்தையை போலீசார் கைது செய்தனர்.