Asianet News TamilAsianet News Tamil

பில்லூர் அணை நீர்மட்டம் உயர்வால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

பில்லூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பவானி ஆற்று கரையோர மக்களுக்கு முதல் கட்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ளது பில்லூர் அணை. இந்த அணையின்  நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், மதகுகள் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "மேட்டுப்பாளையம் வட்டம் பில்லூர் அணையின் மொத்த நீர்மட்டம் 100 அடி. தற்போதைய நிலவரப்படி (இன்று அதிகாலை 4.30 மணி) நீர்மட்டம் 93.5 அடியை எட்டி இருந்தது. பில்லூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு 14,000 கன அடி வீதமாக நீர் வந்து கொண்டுள்ளது. 

அணையின் மதகுகள் திறக்க வாய்ப்புகள் உள்ளதாக இன்று காலை நீர் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், சிறுவர்கள் ஆற்று பக்கம் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Video Top Stories