மாணவனை கடிதம் எழுத வைத்த நீட் தேர்வு.. கதறி போலீசிடம் ஓடிய தாய்…
கோவை அருகே நீட் தேர்வில் பெயிலாகி விடுவோம் என்று நினைத்து மாணவர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு ஓடி போன சம்பவம் அதிர வைத்திருக்கிறது.
கோவை: கோவை அருகே நீட் தேர்வில் பெயிலாகி விடுவோம் என்று நினைத்து மாணவர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு ஓடி போன சம்பவம் அதிர வைத்திருக்கிறது.
மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் உள்ள பிளஸ் 2 மாணவர்களை பாடாய்படுத்தி வருகிறது நீட் நுழைவுத் தேர்வு. இந்த தேர்வுக்கு எதிராக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் குரல் எழுப்பி வருகின்றன.
அதே நேரத்தில் நீட் தேர்வில் தோல்வி, மாணவர் தற்கொலை போன்ற செய்திகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தற்கொலை தீர்வல்ல… மாணவர்களுக்கு மனநல ஆலோசனையும், தன்னம்பிக்கையும் அவசியம் என்று பலரும் சொல்லி வருகின்றனர்.
இந் நிலையில் கோவையில் நீட் தேர்வு எழுதிய மாணவர் ஒருவர் தோல்வி அடைந்துவிடுவோம் என்று பயந்து கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
அந்த மாணவரின் பெயர் விக்னேஷ். நீலகிரி மாவட்டம் மதன் என்பவரின் மகன். நீட் தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக தாய் அம்பிகாவுடன் கோவையை அடுத்துள்ள பெரிய நாயக்கன்பாளையத்தில் வீடு எடுத்து தங்கி உள்ளார்.
நீட் தேர்வையும் எழுதி இருக்கிறார்… ஆனால் தேர்வில் தோற்றுவிடுவோம் என்று அவநம்பிக்கையுடன் இருந்த விக்னேஷ் கவலையுடனே காணப்பட்டு உள்ளார். நிலைமை இப்படியிருக்க திடீரென காணாமல் போய்விட்டார்.
கூடவே தமது டைரியில் பெற்றோருக்கு ஒரு கடிதமும் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். நீட் தேர்வில் தோற்றுவிடுவோம் என்ற உண்மையை கூற பயமாக இருக்கிறது. வீட்டை விட்டு செல்கிறேன், வெற்றி பெற்றவனாக சில ஆண்டுகளில் வருவேன், சத்தியம் என்று எழுதி இருக்கிறார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.