Asianet News TamilAsianet News Tamil

திருமணிமுத்தாற்றில் கலக்கும் சாயப்பட்டறை கழிவுநீர்; தரைப்பாலத்தில் பனிபோல தேங்கிய இரசாயன நுரை...

Drainage water mixed in ThirumaniMurtharu chemical foam on roads
Drainage water mixed in ThirumaniMurtharu chemical foam on roads
Author
First Published Jul 4, 2018, 10:26 AM IST


நாமக்கல்

நாமக்கல்லில் உள்ள திருமணிமுத்தாற்றில் சாயப்பட்டறை கழிவுநீர் கலப்பதால் தரைப்பாலத்தில் இரசாயனம் கலந்த நுரை பனிபோல தேங்கியது. இதனால் 2-வது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு உண்டானது. 

இந்த மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் - மல்லசமுத்திரம் இடையே மதியம்பட்டி கிராமத்தின் அருகே திருமணிமுத்தாற்றில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனால் வெண்ணந்தூரில் இருந்து மல்லசமுத்திரத்திற்கு கூடுதலாக 5 கிலோ மீட்டர் தொலைவு சுற்றி வாகன ஓட்டிகள் சென்றனர். மேலும், நடுப்பட்டி, வெண்ணந்தூர், சபரிபாளையம், செம்மாண்டப்பட்டி, அளவாய்பட்டி ஆகிய ஐந்து கிராம மக்கள் இதனால் கடும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில், தொடர் மழையால் 2-வது நாளாக திருமணிமுத்தாற்றில் தண்ணீர் அதிகம் வந்தது. இதில் இரசாயனம் கலந்த நீரும் சேர்ந்து வந்தது. இதனால் பெருக்கெடுத்து வந்த மழைநீரில் அதிகப்படியான நுரை ஏற்பட்டு மல்லசமுத்திரம் - மதியம்பட்டி தரைப்பாலத்திலும், சாலையிலும் பனிபோல நுரை தேங்கி நின்றது.

சாலையை மறைக்கும் அளவுக்கு நுரை தேங்கியிருந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் கல்லூரி, பள்ளி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வாகன ஓட்டிகளும் பெரும் சிரமம் அடைந்தனர். 

நேற்று 2-வது நாளாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் நுரையை அகற்றும் பணி நடைபெற்றது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், "நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகே மதியம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

மதியம்பட்டி வழியாக திருமணிமுத்தாறு செல்வதால் மதியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 500 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெற்று வந்தது.

இந்த நிலையில், திருமணிமுத்தாறு பகுதியோரத்தில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், திருமணிமுத்தாற்றில் கலக்கிறது. அந்த இரசாயனம் கலந்த கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து வருவதால் அந்த தண்ணீரை விவசாயத்துக்கோ, பிற உபயோகங்களுக்கோ பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. 

மேலும், இந்த இரசாயனம் கலந்த கழிவுநீரால் அதிகளவு நுரை ஏற்பட்டு அவ்வப்போது போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் கூறினர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios