கோவையை அதிர வைத்த சம்பவம்.. கார் உதிரிபாகங்கள் குடோன் தீக்கிரை
கோவையில் கார் உதிரிபாகங்கள் விற்பனை குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை:கோவையில் கார் உதிரிபாகங்கள் விற்பனை குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவையில் ஸ்ரீநகர் பகுதியில் கார் உதிரிபாகங்கள் விற்பனை குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் எதிர்பாராத விதமாக இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
வான் வரை கொழுந்துவிட்டு எரிந்த தீயால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. குபுகுபுவென கரும்புகையுடன் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
முதல் கட்டமாக தீ விபத்து நிகழ்ந்த குடோனில் இருப்பவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர். பொதுமக்களை யாரும் அங்கு நெருங்க விடாமல் பாதுகாத்தனர்.
கிட்டத்தட்ட 3 வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். குடோனில் கார்களுக்கு பயன்படுத்தக்கூடிய பெயிண்ட், ஆயில் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளன.
தீ விபத்தில் அவை பற்றி எரிய அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது. புகையுடன், துர்நாற்றமும் எழுந்ததால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதி அடைந்தனர். தீ தொடர்ந்து எரிந்து கொண்டே சென்றதால் சோப்பு நுரை கலந்த நீரை பயன்படுத்தி கட்டுப்படுத்த ஆரம்பித்தனர்.
கிட்டத்தட்ட பலமணி நேரம் போராட்டத்துக்கு பின்னரே தீ முழுமையாக கட்டுக்குள் வந்தது. தீ விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உதிரிபாகங்கள் எரிந்து தீக்கிரையாகின.
குடோனின் ஒரு பகுதி முழுவதும் அப்படியே தீயின் நாக்குகளுக்கு இரையாகி விட்டது. தீ விபத்து நிகழ்ந்த நேரம் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் குவிந்திருந்தனர். பாதுகாப்பு கருதி அவர்கள் அனைவரும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் என்னவென்று கண்டறியப்படவில்லை. மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கார் உதிரி பாக விற்பனை குடோனில் ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் பல மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.