தமிழ்நாட்டில் கொடிய AY 4.2 வகை கொரோனா இல்லவே இல்லை... மா.சு திட்டவட்ட பேட்டி!
தமிழகத்தில் AY 4.2 என்ற புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தற்போது வரை டெல்டா வகை கோரோனா வைரஸ் பாதிப்பு தான் கண்டறியப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரசின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் தற்போது புதிய வகை உருமாறிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது. AY 4.2 என்று அழைக்கப்படும் அந்த வைரஸ் முன்பு இருந்த கொரோனா வைரசை விட வேகமாக பரவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே இந்த AY 4.2 என்ற புதிய வகை உருமாறிய வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா பேசுகையில், AY 4.2 என்ற புதிய வகை உருமாறிய வைரஸ் குறித்து ஆய்வு செய்துவருவதாகவும் ஐ.சி.எம்.ஆர் மற்றும் தேசிய நோய்த் தடுப்புத்துறை மருத்துவர்கள் குழு ஆய்வில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், தமிழகத்தில் AY 4.2 என்ற புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும் தற்போது வரை டெல்டா வகை கோரோனா வைரஸ் பாதிப்பு தான் கண்டறியப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.