FIFA World Cup: தங்களது கடைசி உலக கோப்பையை ஆடும் 5 லெஜண்ட் கால்பந்து வீரர்கள்
கத்தாரில் நடக்கும் 22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர், சமகாலத்தின் தலைசிறந்த 5 லெஜண்ட் கால்பந்து வீரர்களின் கடைசி உலக கோப்பை தொடராக அமையவுள்ளது. அந்த 5 லெஜண்ட் வீரர்கள் யார் யாரென்று பார்ப்போம்.
ஃபிஃபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்திவருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் சர்வதேச அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழா. கிரிக்கெட் உலக கோப்பையை விட சர்வதேச அளவில் பெரும்பாலானோரால் பார்க்கப்படும் மற்றும் கொண்டாடப்படுவது கால்பந்து உலக கோப்பை. 22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை கத்தாரில் நடக்கிறது. வரும் 20ம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி வரை ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது.
கடைசியாக ஃபிஃபா உலக கோப்பையை ஆடும், சமகாலத்தின் தலைசிறந்த 5 கால்பந்து வீரர்களை பார்ப்போம்.
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை: எந்தெந்த தேதிகளில் என்னென்ன போட்டிகள்..? முழு போட்டி விவரம்
1. லியோனல் மெஸ்ஸி
அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி சமகாலத்தின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர். 35 வயதான மெஸ்ஸி, டீன் வயதினரை போன்ற எனர்ஜியுடன் இன்னும் மிகச்சிறப்பாக விளையாடிவருகிறார். அடுத்த தலைமுறைக்கு மிகச்சிறந்த முன்மாதிரியாக திகழ்பவர். 2014 ஃபிஃபா உலக கோப்பையில் லியோனல் மெஸ்ஸி மிகச்சிறப்பாக ஆடி அர்ஜ்னெடினாவை ஃபைனல் வரை அழைத்துச்சென்றார். ஆனால் அந்த உலக கோப்பை ஃபைனலில் ஜெர்மனியிடம் தோற்று கோப்பையை இழந்தது அர்ஜெண்டினா. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக திகழ்கிறது அர்ஜெண்டினா. அதற்கு முக்கியகாரணம் மெஸ்ஸி. இந்த ஃபிஃபா உலக கோப்பை தான் தனது கடைசி கால்பந்து உலக கோப்பை தொடர் என ஏற்கனவே அறிவித்துவிட்டார். எனவே தனது இந்த கடைசி உலக கோப்பை தொடரில் அர்ஜெண்டினாவிற்கு கோப்பையை வென்று கொடுக்கும் முனைப்பில் உள்ளார் மெஸ்ஸி.
2. கிறிஸ்டியானா ரொனால்டோ
சர்வதேச அளவில் கால்பந்து ரசிகர்களால், ஒட்டுமொத்த விளையாட்டு ரசிகர்கள் மற்றும் சமகாலத்தின் விளையாட்டு வீரர்களால் கொண்டாடப்படுபவரும், முன்மாதிரியாகவும் திகழ்பவர் கிறிஸ்டியானா ரொனால்டோ. போர்ச்சுகலை சேர்ந்த ரொனால்டோ சமகாலத்தின் தலைசிறந்த கால்பந்து வீரர். ரொனால்டோ அவரது கெரியரில் எத்தனையோ மிகச்சிறந்த கோல்களை அடித்திருந்தாலும், கடந்த உலக கோப்பையில் ஸ்பெய்னுக்கு எதிராக ஃப்ரீ-கிக்கில் அடித்த கோலை யாராலும் மறக்கமுடியாது. இந்த உலக கோப்பையை வெல்லுமளவிற்கான வலுவான அணி போர்ச்சுகல் கிடையாது என்றாலும், ரொனால்டோ கண்டிப்பாக தனது அணியை கோப்பையை நோக்கி அழைத்துச்செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கும் இது கடைசி உலக கோப்பையாக இருக்கலாம் என்பதால் அவரும் கண்டிப்பாக தனது அணிக்கு கோப்பையை வென்று கொடுக்கும் முனைப்பில் உள்ளார்.
3. செர்ஜியோ ராமோஸ்
ஸ்பெய்ன் வீரரான செர்ஜியோ ராமோஸ் சமகாலத்தின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர். ஏற்கனவே 3 கால்பந்து உலக கோப்பைகளில் ஆடியுள்ள செர்ஜியோ ராமோஸுக்கு இது 4வது உலக கோப்பை. 2010ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற ஸ்பெய்ன் அணியில் செர்ஜியோ ராமோஸ் ஆடினார். தான் ஆடிய முதல் உலக கோப்பையை ஸ்பெய்ன் வென்ற நிலையில், தனது கடைசி உலக கோப்பையிலும் ஸ்பெய்னுக்கு கோப்பையை வென்று கொடுக்கும் முனைப்பில் உள்ளார் ராமோஸ்.
4. மேனுவல் நியூவர்
ஜெர்மனி ஸ்வீப்பர் - கீப்பர் மேனுவல் நியூவர். 2014 ஃபிஃபா உலக கோப்பையின் சூப்பர் ஸ்டார் இவர். 2014 உலக கோப்பை ஃபைனலில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி ஜெர்மனி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர் நியூவர். 2014 உலக கோப்பையை ஜெர்மனி வென்றபோது முக்கிய பங்களிப்பை கொடுத்தவர் நியூவர். அது அவரது சர்வதேச கால்பந்து கெரியரில் பெரிய சாதனை என்றே சொல்லவேண்டும். கத்தாரில் நடக்கும் ஃபிஃபா உலக கோப்பை இவருக்கும் கடைசி உலக கோப்பையாக இருக்கலாம்.
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை போட்டிகளை எந்த சேனல் & ஆன்லைனில் பார்க்கலாம்..? முழு ஒளிபரப்பு விவரம்
5. லூகா மாட்ரிக்
குரோஷியாவை சேர்ந்த லூகா மாட்ரிக்கும் மிகச்சிறந்த கால்பந்து வீரர் ஆவார். 2018 உலக கோப்பை ஃபைனலில் ஃப்ரான்ஸை எதிர்கொண்ட குரோஷியா 4-2 என்ற கோல்கணக்கில் தோற்று கோப்பையை இழந்தது. அந்த உலக கோப்பை ஃபைனலுக்கு குரோஷியா சென்றதற்கு முக்கிய காரணம் லூகா ஆவார். கால்நகர்த்தலில் வல்லவர் லூகா மாட்ரிக். இவருக்கும் கத்தார் உலக கோப்பை கடைசி உலக கோப்பையாக இருக்கலாம்.