பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா - இங்கிலாந்து தொடரின் முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. முதலில் டி20 போட்டிகள் நடக்கின்றன. அதன்பிறகு ஒருநாள் தொடர், பின்னர் டெஸ்ட் போட்டிகள் நடக்க உள்ளன. 

முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

காயம் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தீபக் சாஹர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் மிதமிஞ்சிய வீரர்கள் உள்ளனர். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அதிகமான வீரர்கள் உள்ளனர். அனைவருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல.

அணியில் ஆடுவதற்கு அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும் என்றும் பேட்டிங் ஆர்டரில் பல சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஏற்கனவே இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், இன்றைய போட்டியில் ஆடும் லெவனில் யார் யார் இடம்பெறுவர்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இன்றைய போட்டியில் ஆடும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம்..

ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோலி(கேப்டன்), ராகுல், சுரேஷ் ரெய்னா, தோனி, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், சாஹல்

புவனேஷ்வர் குமார் நன்றாக ஸ்விங் செய்வார். உமேஷ் யாதவ் வேகமாக வீசுவார். எனவே இவர்கள் இருவரும் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.