சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பெளதிஸ்டா அகுட் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

ஒட்டுமொத்தத்தில் அவர் வென்ற 5-ஆவது ஏடிபி பட்டம் இது. போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த பெளதிஸ்டா, தனது இறுதிச் சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ரஷியாவின் டேனியல் மெத்வதேவை தோற்கடித்தார்.

சென்னை ஓபனில் முதல்முறையாக பங்கேற்றவரான மெத்வதேவ், தனது டென்னிஸ் வாழ்க்கையில் முதல்முறையாக ஏடிபி போட்டியின் இறுதிச் சுற்றில் விளையாடிய மகிழ்ச்சியோடு விடை பெற்றார்.

தெற்காசியாவின் ஒரே ஏடிபி போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) மைதானத்தில் கடந்த 7 நாள்களாக நடைபெற்றது.

இதில் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் சர்வதேச தரவரிசையில் 14-ஆவது இடத்தில் இருக்கும் பெளதிஸ்டாவும், 99-ஆவது இடத்தில் இருக்கும் மெத்வதேவும் மோதினர்.

இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அசத்தலாக ஆடிய பெளதிஸ்டா 4-ஆவது கேமில் மெத்வதேவின் சர்வீûஸ முறியடித்து 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதன்பிறகு 6-ஆவது கேமில் மீண்டும் மெத்வதேவின் சர்வீûஸ முறியடிக்க முயன்றார் பெளதிஸ்டா. ஆனால் விடாப்பிடியாக போராடிய மெத்வதேவ், 3 முறை டியூஸ் வரை சென்ற அந்த கேமை தன்வசமாக்கிக் கொண்டார்.

இதன்பிறகு தனது சர்வீûஸ காப்பாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட மெத்வதேவால், பெளதிஸ்டாவின் சர்வீûஸ முறியடிப்பதில் தீவிரம் காட்ட முடியவில்லை. இதனால் முதல் செட்டை பௌதிஸ்டா 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இந்த செட் 33 நிமிடங்களில் முடிந்தது.

பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டிலும் பெளதிஸ்டா அபாரமாக ஆட, முதல் கேமிலேயே தனது சர்வீûஸ தக்கவைக்க கடுமையாகப் போராடினார் மெத்வதேவ். 3-ஆவது கேமில் மெத்வதேவுக்கு பெளதிஸ்டா நெருக்கடி கொடுக்க, அதில் ஒரு ரேலியில் மட்டும் 30 ஷாட்கள் ஆடப்பட்டன.

4-ஆவது கேமில் பெளதிஸ்டாவின் சர்வீûஸ முறியடிக்க கடுமையாகப் போராடினார் மெத்வதேவ். ஆனால் பெளதிஸ்டா மிக எளிதாக அவருடைய முயற்சியை தகர்த்தார்.

8 கேம்கள் வரை இருவரும் சமநிலையில் இருக்க, 9-ஆவது கேமில் மெத்வதேவின் சர்வீûஸ முறியடித்த பெளதிஸ்டா, 6-4 என்ற கணக்கில் 2-ஆவது செட்டை கைப்பற்றி, 10-ஆவது கேமோடு போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார். இந்த ஆட்டம் 1 மணி, 14 நிமிடங்கள் நடைபெற்றது.