இந்திய - லெபனான் கால்பந்து அணிகளுக்கு இடையே ஜூன் 7-ஆம் தேதி மும்பையில் நடைபெற இருந்த நட்புரீதியிலான ஆட்டம் ரத்தானது.

இந்திய - லெபனான் கால்பந்து அணிகளுக்கு இடையே ஜூன் 7-ஆம் தேதி மும்பையில் நட்புரீதியிலான ஆட்டம் நடைபெற இருந்தது.

ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் ஜூன் 13-ஆம் தேதி கைர்ஜிஸ்தானுடன் இந்தியா மோதுகிறது.

லெபனானுடனான ஆட்டம் அதற்கு ஒரு சிறந்த பயிற்சி ஆட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் லெபனான் அணி வீரர்களுக்கு நுழைவு இசைவு (விசா) பெறுவதில் உள்ள பிரச்சனைகளின் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்க இயலாது என அந்நாட்டு கால்பந்து அணி தெரிவித்துள்ளதால் இந்தியா அதிர்ச்சியில் உள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

“லெனான் கால்பந்து வீரர்கள் பலர் தங்களது கிளப் அணிகளுக்கான போட்டிகளில் விளையாடுவதற்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும், இந்தியாவுடனான போட்டிக்காக நுழைவு இசைவை பெற லெபனானுக்கு வர இயலாத நிலையில் அவர்கள் இருப்பதாகவும் அந்நாட்டு கால்பந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே, அன்றைய தேதியில் மாற்று அணியை இந்தியாவுடன் விளையாடச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும், வேறு நாட்டு கால்பந்து அணியை ஏற்பாடு செய்வதற்கு குறுகிய கால அவகாசமே உள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.