இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வானின் கருத்துக்கு அடில் ரஷீத் பதிலடி கொடுத்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை சமாளிக்க, கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் ஆடாத அடில் ரஷீத் மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், 4 நாள் டெஸ்ட் போட்டியில் கூட ஆடாமல் இருந்தவரை நாம் டெஸ்ட் அணியில் சேர்த்துள்ளோம். அதுவும் ஸ்பின் பவுலிங்கை நன்றாக ஆடும் இந்தியாவிற்கு எதிராக ரஷீத் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் நன்றாக ஆடுவதும் ஆடாததும் அடுத்த விஷயம். ஆனால் இந்த முடிவு கேலிக்குரியது என விமர்சித்திருந்தார். 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள அடில் ரஷீத், மைக்கேல் வான் கருத்தெல்லாம் யாருக்கும் ஒரு பொருட்டேயல்ல. சிவப்பு பந்து கிரிக்கெட்டில் ஆடமாட்டேன் என்று நான் கூறியபோதும் முட்டாள்தனமாக கருத்து கூறினார். அவர் கூறுவதை எல்லாம் யாரும் ஆர்வமாக பார்ப்பதில்லை. அவர் எனக்கு எதிராக செயல்படுவதாக நினைக்கவில்லை. ஓய்வு பெற்ற சில வீரர்கள், அணியில் ஆடும் வீரர்களை பற்றி சில வேளைகளில் அர்த்தமற்ற முட்டாள்தனமான கருத்துகளை கூறுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர் என அடில் ரஷீத் பதிலடி கொடுத்துள்ளார்.