கோடைகாலத்தில் உடலை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்..!
கோடைகாலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், உடலை பராமரிக்கவும் சில பயனுள்ள குறிப்புகள்..
அக்னி நட்சத்திரம் தொடங்கி மக்களை வாட்டி வதைக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலால் உடல் படாதபாடுபட்டு கொண்டிருக்கிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பி பிழைக்க முன்னோர் சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர். கோடைகாலத்தில் உணவு பழக்க வழக்கங்களை மாற்றி கொள்ள வேண்டும்.
உணவு பழக்கம்
கோடையில் உணவு பழக்கங்களில் சில மாற்றங்களை செய்தால் போதும். அரிசி, சப்பாத்தி போன்றவை எப்போதும் போல எடுத்து கொள்ளலாம். ஆனால் மதிய வேளைகளில் உணவுடன் மோர், தயிர் ஆகியவை சேர்த்து எடுத்து கொண்டால் நல்லது. நார்சத்து நிறைந்து காணப்படும் பழங்கள், காய்களை அதிகம் உண்ணலாம்.
கவனம்
கொளுத்தும் வெயிலில் உடலைச் சீராக வைக்க காரசாரமான உணவுகள், துரித உணவுகள் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த வறுத்த உணவுகளை குறையுங்கள்.
நீரிழப்பு
கோடை காலத்தில் அதிக வெப்பம் காணப்படுவதால் உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறும். இதனால் உடலில் நீரிழப்பு ஏற்படும். இதன் காரணமாக உடலில் ஆற்றல் இழப்பு ஏற்பட்டு சோர்வு ஏற்படும். இந்த மாதிரி சமயங்களில் மயக்கம், அஜீரணம், சரும பிரச்சனைகள் ஏற்படலாம். இதைத் தவிர்க்க சரியான நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும். வீட்டிலுள்ள பழைய சோற்றில் ஊறிய நீராகாரம் எடுத்து கொள்வது நல்லது.
உணவு முதல் கோடைகாலத்தில் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சிறந்த டிப்ஸ்!
வெளியே செல்லும்போது கையில் எப்போதும் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும். எவ்வளவு தண்ணீர் உடலுக்கு செல்கிறதோ அவ்வளவு நல்லது. காபி, டீ குடிப்பதை குறைக்க வேண்டும். இவை உடல் சூட்டை அதிகரிக்கும்.
கோடைகால பானங்கள்
- நம் வீட்டில் அரிசி கழுவிய கழுநீரில் கருப்பட்டியும், கொஞ்சம் வெண்ணெயையும் சேர்த்து காலையில் அருந்தினால் வெயிலுக்கு உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.
- அரிசியை கழுவி விட்ட நீரை விரும்பாதவர்கள் சீரகம் அல்லது சோம்பு சேர்த்த நீரை கருப்பட்டி சேர்த்து குடிக்கலாம்.
- கருப்பட்டியுடன், எலுமிச்சை சாற்றை பிழிந்து கொஞ்சம் உப்பு, தண்ணீர் சேர்த்து அருந்தினால் உடலுக்கு உற்சாகம் அதிகரிக்கும்.
இதையும் படிங்க: ஆயுர்வேதம் சொல்லும் கோடைகால உணவுகள்.. உடல் குளுமைக்கு இது முக்கியம்!