அசைவ உணவுகளில் முட்டை உணவுகளுக்கு தனி fanbase உண்டு. அசைவம்-சைவம் இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பவர்களின் நாக்கின் சுவையை கட்டி இழுக்கும் சுவையான, காரசாரமான முட்டை கிரேவியை வீட்டில் ஈஸியா செய்யலாம். இதன் சுவையை மறக்கவே முடியாது.

முட்டை கிரேவி என்பது, வேகவைத்த முட்டைகளை வெங்காயம், தக்காளி மற்றும் பல்வேறு மசாலாப் பொருட்களுடன் சமைத்து தயாரிக்கப்படும் ஒரு கெட்டியான குழம்பு ஆகும். இது முட்டை மசாலா, முட்டை குழம்பு போன்ற பல்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இதன் சுவை, சமைக்கும் முறையை பொறுத்து மாறுபடும்.

தேவையான பொருட்கள்:

முட்டைகள் - 4-6

எண்ணெய் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

மசாலா கிரேவிக்கு:

சமையல் எண்ணெய் - 2-3 தேக்கரண்டி

பட்டை - 1 சிறிய துண்டு

கிராம்பு - 2-3

பெரிய வெங்காயம் - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 1-2

தக்காளி - 2-3

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1-2 தேக்கரண்டி

மல்லித்தூள் (தனியா தூள்) - 1 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை:

முதலில், முட்டைகளை நன்கு வேகவைத்துக் கொள்ளவும். வேகவைத்த முட்டைகளின் தோலை உரித்து, ஒவ்வொரு முட்டையிலும் கத்தியால் லேசாக கீறல்கள் போட்டு வைக்கவும்.

ஒரு கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கி, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, கீறல் போட்ட முட்டைகளை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

மசாலா கிரேவி தயாரித்தல்:

அதே கடாயில் 2-3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், பட்டை, கிராம்பு, சேர்த்து தாளிக்கவும். அடுத்து, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 

இப்போது, நறுக்கிய தக்காளியை சேர்த்து, தக்காளி குழையும் வரை நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும். தேவைப்பட்டால், சிறிதளவு தண்ணீர் தெளித்து வதக்கலாம்.

வதக்கிய மசாலா கலவையுடன் 1 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். குழம்பு ஒரு கொதி வந்ததும், தீயைக் குறைத்து, மூடி போட்டு, எண்ணெய் பிரிந்து வரும் வரை 5-7 நிமிடங்கள் கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்து, எண்ணெய் பிரிந்து வந்ததும், வறுத்து வைத்துள்ள முட்டைகளை மெதுவாக கிரேவிக்குள் சேர்க்கவும். 

முட்டைகளைச் சேர்த்த பிறகு, கிரேவியை மெதுவாகக் கிளறி, மீண்டும் மூடி போட்டு 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும். இதனால் முட்டைகளில் மசாலா நன்கு ஊறி, சுவையாக இருக்கும். அடுப்பை அணைத்து, இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவினால் முட்டை கிரேவி ரெடி.

பரிமாறும் முறை:

சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா, ரொட்டி ஆகியவற்றுடன் முட்டை கிரேவி அருமையாக பொருந்தும்.