Walking : 50 வயசுக்கு மேல எத்தனை காலடிகள் நடக்கனும்? நீண்ட ஆயுளுக்கு இதுதான் வழி!!
நடைபயிற்சி செய்வதற்கு பின்னுள்ள அறிவியல் காரணங்கள், 10,000 அடிகள் கண்டிப்பாக நடக்க வேண்டுமா? என்பதை இங்கு காணலாம்.

நாள்தோறும் 10,000 காலடிகள் நடக்க வேண்டும். இப்படி நடப்பது ஒட்டுமொத்த உடலுக்கும் ஆரோக்கியம் என சமீபகாலமாக சொல்லப்பட்டு வருகிறது. நடைபயிற்சி ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் காலடிகள் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்பதற்கு பின்னுள்ள காரணங்களையும், பின்னணியையும் இங்கு காணலாம்.
அண்மையில் பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வெளியான ஆய்வில், பத்தாயிரம் காலடிகள் வாக்கிங் செல்வது பற்றிய நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறது. ஏனென்றால் தொடர்ந்து குறைவான அடிகள் நடந்தாலும், வயதானவர்களிடையே இதய நோய், ஆரம்பகால மரணத்திற்கு எதிராக பாதுகாப்பு கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் வயதான பெண்களை வைத்து ஓர் ஆய்வு செய்யப்பட்டது. அதில் காலடி எண்ணிக்கைக்கும் நீண்ட ஆயுளுக்கும் இடையே இருந்த தொடர்பு கண்காணிக்கப்பட்டது. இதில் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நடந்த பெண்களையும், (4 ஆயிரத்திற்கும் குறைவான காலடிகள்) நடக்காதவர்களையும் ஒப்பிடும்போது அவர்களுக்கு இறப்பு அபாயம் 26% ஆகவும், இதய நோய் ஆபத்து 27% ஆகவும் குறைந்தது தெரியவந்தது. நடப்பவர்கள் கூடுதல் நலமாக இருந்துள்ளனர்.
ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் அதே இலக்கை நோக்கி நடந்தவர்களுக்கு இறப்பு விகிதத்தில் 40% குறைந்துள்ளது. இதய நோய் அபாயமும் 27% குறைந்தது. ஒருநாளில் 7,000 அடிகள் நடப்பது நீண்ட ஆயுளுக்கு உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் அதிக வித்தியாசம் ஏற்படவில்லை.
ஒரு நாளைக்கு நடக்கும் மொத்த அடிகள்தான் ஆரோக்கியத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நாள்தோறும் இலக்கை அடைவதை விட நாள்தோறும் இயங்குவதுதான் முக்கியம். வயதானவர்கள் நாள்தோறும் 10000 காலடிகள் நடப்பதற்கு பதிலாக 4,000 அடிகள் நடப்பது கூட போதும். அதற்கு மேல் நடக்க முடிந்தால் நடக்கலாம். நடக்க முடியாதவர்கள் வாரத்தில் சில நாட்கள் 30 முதல் 40 நிமிடங்கள் இயக்கம் இருந்தாலும் அவர்கள் ஆரோக்கியத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தும். அதனால் தினமும் முடிந்தவரை இயங்குவதைப் பழக்கப்படுத்த வேண்டும்.
50 வயதுக்கு மேல் தினமும் காலை 15 நிமிடங்கள், மாலை 15 நிமிடங்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மூன்று வேளையும் உணவுக்கு பின் 10 நிமிடங்கள் நடக்க வேண்டும். இது உங்களுடைய இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது.