- Home
- உடல்நலம்
- Summer Heart care இதய நோயாளிகள் கவனத்திற்கு... கோடை வெயிலில் ஒளிந்திருக்கும் 'சைலண்ட்' ஆபத்துக்கள்
Summer Heart care இதய நோயாளிகள் கவனத்திற்கு... கோடை வெயிலில் ஒளிந்திருக்கும் 'சைலண்ட்' ஆபத்துக்கள்
கோடை கத்திரி வெயில் வாட்டுவதால் இதய நோயாளிகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சரியான உணவு முறை மற்றும் போதுமான நீர்ச்சத்து மூலம் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது அவசியம். வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள எளிய வழிமுறைகளை இங்கே காணலாம்.

இதயம் ஏன் கோடையில் திணறுகிறது?
வெயில் அதிகரிக்கும் போது, நம் உடல் தன்னை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள தோலுக்கு அதிக இரத்தத்தை அனுப்புகிறது. இதனால், இதயம் வழக்கத்தை விட 2 முதல் 4 மடங்கு வேகமாக துடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது. இது பலவீனமான இதயத்திற்கு கூடுதல் சுமை!
வியர்வையும் இரத்தத்தின் அடர்த்தியும்!
அதிகமாக வியர்க்கும்போது உடலில் நீர்ச்சத்து குறைகிறது . இதனால் ரத்தம் "கெட்டியாக" மாறும் வாய்ப்பு உண்டு. தடிமனான ரத்தத்தை உடலுக்குள் செலுத்துவதற்கு இதயம் மிகக் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். இதுவே மாரடைப்புக்கு வழிவகுக்கலாம்.
எலக்ட்ரோலைட் சமநிலை!
வியர்வையுடன் சோடியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் வெளியேறுகின்றன. இதயத் துடிப்பு சீராக இருக்க பொட்டாசியம் மிக முக்கியம். இதன் அளவு குறையும் போது, இதயம் தாறுமாறாகத் துடிக்க வாய்ப்புள்ளது.
மருந்துகள் தரும் 'ட்விஸ்ட்'!
ரத்த அழுத்தம் அல்லது இதயத்திற்காக நீங்கள் எடுக்கும் 'டைரெடிக்ஸ்' (Diuretics) போன்ற மருந்துகள், உடலில் உள்ள நீரை வெளியேற்றும் தன்மை கொண்டவை. வெயில் காலத்தில் இந்த மருந்துகள் உங்களை இன்னும் சீக்கிரம் சோர்வடையச் செய்யும். மருத்துவ ஆலோசனை இன்றி டோஸை மாற்ற வேண்டாம்!
'ஹீட் ஸ்ட்ரோக்' - எச்சரிக்கை அறிகுறிகள்!
அளவுக்கு அதிகமான தாகம், தலைசுற்றல், குழப்பமான மனநிலை மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவற்றில் இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். வியர்க்கவே வேண்டிய கோடையில், உங்களுக்கு வியர்க்காமல் தோல் வறண்டு காணப்பட்டால் அது உடனடி ஆபத்தின் அறிகுறி.
குளிர்ந்த நீர் - ஆபத்தா?
வெயிலிலிருந்து வந்தவுடன் ஐஸ் போட்ட குளிர்ந்த நீரை குடிப்பது சுகமாக இருக்கலாம். ஆனால், திடீரென குளிர்ந்த நீர் உள்ளே செல்லும்போது ரத்த நாளங்கள் சுருங்கி விரிவதில் சிக்கல் ஏற்பட்டு, இதயத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். அறை வெப்பநிலையில் உள்ள நீரே சிறந்தது!
உடற்பயிற்சி நேரம் :
உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள், வெயில் ஏறுவதற்கு முன்பே (காலை 7 மணிக்குள்) அல்லது சூரியன் மறைந்த பிறகு (மாலை 6 மணிக்கு மேல்) செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மதிய வெயில் இதயத்திற்கு வில்லன்!
நீர்ச்சத்து தரும் காய்கறிகளே மருந்து!
அதிக காரம் மற்றும் எண்ணெய் உணவுகளை தவிர்த்து, தர்பூசணி, வெள்ளரிக்காய், கிர்ணி பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இது இதயத்தின் சுமையைக் குறைக்கும் 'நேச்சுரல் கூலண்ட்'.
உங்கள் இதயம் உங்கள் கையில்!
கோடைக்காலம் என்பது கொண்டாட்டத்திற்கு மட்டுமல்ல, பாதுகாப்பிற்கும் தான். தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல், அவ்வப்போது தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்குங்கள். உங்கள் இதயம் பத்திரமாகத் துடிக்கட்டும்!

