'போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது'! ஞானவேல் ராஜாவுக்கு சசிகுமாரின் சவுக்கடி கேள்விகள்!
'பருத்தி வீரன்' பிரச்சனை காரணமாக, இயக்குனர் அமீரை கண்ட மேனிக்கு விமர்சித்த, ஞானவேல் ராஜா இப்போது மன்னிப்பு கேட்டுள்ள நிலையில்... சசிகுமார் சில கேள்விகளை முன்வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் அமீர் இயக்கத்தில், வெளியான 'பருத்தி வீரன்' திரைப்படம் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான நிலையில், இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற போதும்... இப்படத்தின் இயக்குனர் அமீர் 2 கோடி ரூபாய் வரை தன்னை ஏமாற்றி விட்டதாக சமீபத்தில் இயக்குனர் ஞானவேல் ராஜா பேட்டி ஒன்றில் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து பேசிய விஷயம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 17-வருடங்களாக நீதி மன்றத்தில் இருக்கும் இப்படம் எப்படி எடுத்து முடிக்க பட்டது, ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில்.. அமீர் பதில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
இதை தொடர்ந்து, ஞானவேல் ராஜாவுக்கு எதிராகவும், அமீருக்கு ஆதரவாகவும்... இயக்குனர் இமயம் பாரதி ராஜா முதல், சமுத்திரக்கனி, கரு பழனியப்பன், பொன் வண்ணன் போன்ற பலர் அடுத்தடுத்து அறிக்கை வெளியிட்டு வெளுத்து வாங்கினர். இதனால் இன்று காலை, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா... அறிக்கை ஒன்றை வெளியிட்டு, மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார்.
இந்த அறிக்கையில், "'பருத்தி வீரன்' பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இதுநாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே "அமீர் அண்ணா" என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது.
அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால், அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஞானவேல் ராஜா.
இவரின் இந்த அறிக்கையை தொடர்ந்து... ஞானவேல் ராஜாவுக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார் சசிகுமார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது அமீர் அண்ணன், ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன? நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால் என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் ஞானவேல் ராஜா, அப்படியெனில் அந்த சில வார்த்தைகள் என்ன? திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? இதன் மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்த கடிதம் யாருக்கு? என சவுக்கடி கேள்விகளை எழுப்பி சசிகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D