Vairamuthu : "கவிஞன் தன் குரலை தணித்துக்கொள்ள வேண்டும்".. கவிப்பேரரசு ட்வீட் வைரல் - காரணம் என்ன தெரியுமா?
Lyricist Vairamuthu : கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் இசைஞானி இளையராஜா குறித்த விவாதங்கள் தான் இப்பொழுது இணையத்தில் வைராகி வருகின்றது.
கடந்த 1980வது ஆண்டு இசை உலகின் ராஜா இளையராஜாவின் இசையில் "நிழல்கள்" என்கின்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த படத்தில் ஒலித்த "இது ஒரு பொன் மாலை பொழுது" என்கின்ற பாடலின் மூலம் தமிழ் திரை உலகில் கவிஞராகவும், பாடல் ஆசிரியராகவும் களமிறங்கியவர் தான் கவிப்பேரரசு வைரமுத்து.
எண்ணற்ற தமிழ் திரைப்பட பாடல்களையும், பல புத்தகங்களையும் கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ள கவி பேரரசு வைரமுத்து, கடந்த 44 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் பயணித்து வருகிறார். இந்த சூழலில் அண்மையில் "படிக்காத பக்கங்கள்" என்கின்ற ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்று பேசினார்.
வைரமுத்து பேசியது என்ன?
அப்பொழுது பேசிய வைரமுத்து.. இசை பெரிதா.. மொழி பெரிதா என்பது இப்பொழுது பெரிய விவாதமாக மாறி உள்ளது. இதில் என்ன சந்தேகம் இசை எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரியது மொழி. மொழி எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியது இசை. இதை புரிந்து கொண்டவர்கள் ஞானி, புரிந்துகொள்ளாதவர்கள் அந்நியானி என்று பேசி இருந்தார்.
இணையத்தில் பலரும் கவிப்பேரரசு வைரமுத்து, இளையராஜாவை தான் சாடி பேசி இருக்கிறார் என்று கூற, அதற்கு பதில் அளிக்கும் வகையில் இளையராஜாவின் தம்பியும், பிரபல இசையமைப்பாளருமான கங்கை அமரன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் வைரமுத்து ஒரு மிகச் சிறந்த கவிஞர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் அவர் ஒரு நல்ல மனிதரா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. இளையராஜா தான் அவருக்கு வாழ்வளித்தார். தினமும் அவருடைய புகைப்படத்தை வைரமுத்து தன் வீட்டில் வைத்து வணங்க வேண்டும். இனியும் இதுபோன்ற விஷயங்களை அவர் பொதுவெளியில் பேசிக்கொண்டு இருந்தால், நிச்சயம் அவருக்கு மிகப்பெரிய சிக்கல்கள் வரக்கூடும் என்று எச்சரித்தார்.
வைரமுத்து ட்வீட்
இதனை அடுத்து கங்கை அமரனுக்கு எதிராகவும், வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் இணையத்தில் பலரும் பேசத் தொடங்கினர். இந்த சூழலில் தற்பொழுது கவிஞர் வைரமுத்து அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் ஒரு கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கவிஞர்கள் தற்பொழுது தங்கள் குரலை தணித்துகொள்ள வேண்டும் என்ற நிலை உள்ளதாக கூறி எழுதி இருக்கிறார். இதில் கங்கை அமரனுக்கு அளிக்கின்ற பதிலாக கூட இருக்கலாம் என்று இணையவாசிகள் அதை வைரலாக்கி வருகின்றனர்.