பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் திருவிழாவின் தொடக்க விழா தற்போது செய்ன் நதிக்கரையில் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 1900 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து 100 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் தொடர் நடைபெறுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடர் தற்போது பாரிஸில் ஜூலை 26ஆம் தேதியான இன்று தொடங்கியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஒலிம்பிக் ஸ்டேடியத்திற்கு வெளியில் செய்ன் நதிக்கரையில் தொடங்கியுள்ளது. இந்த தொடரில் இடம் பெற்ற 10,714 விளையாட்டு வீரர்கள் 160க்கும் அதிகமான படகுகள் கிட்டத்தட்ட 6 கிமீ தூரம் வரையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர்.
ஆஸ்டர்லிட்ஸ் பகுதியில் தொடங்கி டிரோகெடெரோ வரையில் ஒவ்வொரு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் அணிவகுத்து செல்கின்றனர். முதல் நாடாக ஒலிம்பிக்கின் தாயகமான கிரீஸ் கொடியை ஏந்தி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தியது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் தென் ஆப்பிரிக்கா, அல்ஜீரியா, அங்கோலா, ஆண்டிகுவா, பர்புடா, சவுதி அரேபியா, அர்ஜெண்டினா, அரூபா, ஆஸ்ட்ரியா, அஜர்பைஜான், பஹ்ரைன், பிரேசில், பல்கேரியா, புரூண்டி என்று ஒவ்வொரு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் அணி வகுத்து சென்றனர்.
இதற்கிடையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தி காகா ஷோ, பிரஞ்சு புரட்சியை மையப்படுத்திய டான்ஸ் ஷோ, சுதந்திரம் என்று கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 2500 கலைஞர்கள் இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். மேலும், 3 லட்சம் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை நேரடியாக கண்டு ரசிக்கின்றனர். இந்தியா சார்பில் பிவி சிந்து மற்றும் சரத் கமல் இருவரும் இந்தியா நாட்டிற்காக தேசிய கொடியை ஏந்தி அணி வகுப்பு நிகழ்ச்சி நடத்தினர். இதில் இந்திய வீராங்கனைகள் மூவர்ண நிறத்தில் பாரம்பரிய உடை அணிந்தும், வீரர்கள் சமாதானத்திற்கு பெயர் போன வெள்ளை நிறத்தில் உடை அணிந்து அணி வகுப்பு நடத்தினர். இந்த பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடுகின்றனர்.
Womens Asia Cup 2024: இலங்கைக்கு எதிரான 140 ரன்கள் குவித்த பாகிஸ்தான் – இறுதிப் போட்டி யாருக்கு?
