பை நாற்றுக்களை உற்பத்தி செய்ய இந்த வழி உங்களுக்கு உதவும்...
தேக்கு மர சாகுபடியில் பை நாற்றுக்கள் உற்பத்தி செய்தல் :
செம்மண், வண்டல்மண், மணல் மற்றும் நன்கு மக்கிய தொழு உரத்தை தனித்தனியே சலித்து சம அளவில் கலந்து (16X30) செ.மீ. அளவுள்ள பாலித்தீன் பைகளில் நிரப்ப வேண்டும். மண் கலவை நிரப்பப்பட்ட பாலித்தீன் பைகளை (10X1) மீ அளவுள்ள நிலையான பாத்திகளில் அடுக்கி விடவேண்டும்.
பின்பு தாய்பாத்தியிலிருந்து 6 இளைகளுடன் கூடிய தேக்கு இளங்கன்றுகளை பிடுங்கி பாலித்தீன்பைகளில் ஒரு பைக்கு ஒரு செடி வீதம் நடவு செய்ய வேண்டும். மேலும் நாற்றுக்குச்சிகளை தயார் செய்து பாலித்தீன் பைகளில் நட்டும் நாற்றுக்களை உற்பத்தி செய்யலாம்.
பைச்செடிகளுக்கு முதல் 10 நாட்களுக்கு தினம் இரு வேளையும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஒன்றுவிட்டு ஒருநாள் பூவாளியால் நீர் ஊற்ற வேண்டும்.பின்பு வாரத்திற்கு இரண்டு நாள் நீர் ஊற்றினால் போதுமானது. நான்கு மாத காலத்தில் சுமார் 60-75 செ.மீ உயரத்திற்கு நாற்றுக்கள் வளர்ந்திருக்கும்.
இதுவே நடுவதற்கு தகுதியான நாற்றாகும். நாற்றுகள் நடவு செய்ய வேண்டுடிய இடத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். நிலம் சமமாக இருப்பின் ஏர் உழுத பின்பு ஒரு ஏக்கர் பரப்பில் 2மீX2மீ இடைவெளியில் 45செ.மீX45செ.மீX45செ.மீ அளவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் முதன் மழையில் குழிகள் எடுக்க வேண்டும்.
பின்பு செம்மண் மற்றும் வண்டல் மண் சமபங்கு கலந்து அத்துடன் 250 கிராம் கோழிஉரம் அல்லது 2 கிலோ தொழுஉரம் கலந்து எல்லா குழிகளிலும் பாதி அளவிற்கு நிரப்ப வேண்டும். ஜுன்-ஜுலை மாதங்களில் பருவ மழைகிடைத்தவுடன் பாலித்தீன் பைகளை அகற்றிவிட்டு குழிகளில் தாய்மண் கட்டி உடையாதவாறு செடிகளை நடவு செய்ய வேண்டும்.
குழிகளின் மீதிப்பகுதியை சுற்றியுள்ள மேல் மண்ணை கொண்டு மூடி செடியை சுற்றி இறுக்கமாக கால்களால் மண்ணை மிதித்து விடவேண்டும். செடியை சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.