தேக்கு மரம்

உலகில் மதிப்பு வாய்ந்த மர இனங்களில் தேக்கு மரமும் ஒன்றாகும். இதன் தாவர அறிவியல் பெயர் “டெக்டோனா கிரான்டிஸ்” ஆகும். இது “வெர்பினேசியே” தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. 

கிரேக்க மொழியில் ‘டெக்டன்’ என்றால் தச்சருக்கு சம்பந்தப்பட்டது. “கிராண்டிஸ்” என்றால் பிரமாதமானது என அர்த்தமாகும். அதாவது இந்த மரம் “தச்சர்களுக்கு உகந்த பிரமாதமான மரம்” என்ற பொருளில் பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த மரம் ஓங்கி வளர்வதுடன் மிகவும் உறுதியானதுமாகும்.

தேக்கு மரம் பயிரிட ஏற்ற நிலம் எது?

இம்மரம் கடல் மட்டத்திலிருந்து 1200 மீ உயரம் வரையிலுள்ள நிலப்பகுதியல் நன்கு வளரும். ஆண்டு மழையளவு 750 மி.மீ முதல் 2500 மி.மீ.வரை மழை பெறும் இடங்களில் நன்கு வளர்கிறது. 

இம்மரம் நல்ல வடிகால் வசதியுள்ள ஆற்று வண்டல், மணல் கலந்த நிலங்கள், செம்மண் நிலங்கள், செம்புறை மண் நிலங்கள் மற்றும் மணல் கலந்த களி நிலங்களிலும் நன்கு வளரும். மண் ஆழம் குறைவாக உள்ள நிலங்களும் கடுங்களி நிலங்களும் மற்றும் நீர்வடியா நிலங்களும் இம்மரம் வளர்ப்பதற்கு ஏற்றதல்ல. 

இம்மரம் தமிழகம், மத்திய பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், கரநாடகம் மற்றும் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் வறண்ட பகுதிகளில் கூட வளர்கிறது. கேரளா போன்ற அதிக மழைபெறும் மாநிலங்களில் இம்மரம் நன்கு வளர்கிறது.

தேக்கு மரத்தின் சிறப்புகள்...

1. தேக்கு மரம் இலையுதிர்க்கும் மரவகையை சேர்ந்தது. நவம்பர் முதல் ஜனவரி வரை இலையுதிர்த்து நீண்ட நாட்களுக்கு இலையின்றியே காணப்படும். இம்மரம் நல்ல வலிமையுடைய, கரையான் தாக்காத தன்மையுடையது.

2. மேலும் இம்மரம் “ஒளி விரும்பி” (Light Demand-er) ஆகும். நல்ல சூரிய ஒளி கிடைத்தால் தான் மரம் நல்ல முறையில் வளரும்.

3. தேக்குமரம் வளரும் இடத்தை பொறுத்து 15 ஆண்டுகளில் சுமார் 15மீ உயரமும் 90செ.மீ வரை சுற்றளவும் 30 ஆண்டுகளில் சுமார் 25 மீட்டர் உயரமும், 175 செ.மீ சுற்றளவு வரை வளரும்.