புதுக்கோட்டை
 
புதுக்கோட்டையில் குடிக்க தண்ணீர் கேட்டுவிட்டு அசந்த நேரத்தில் 6½ சவரன் நகையை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை குமரன்நகரைச் சேர்ந்தவர் சையது முஸ்தபா. இவரது மனைவி பர்வீன் (23). இவரிடம் நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். பர்வீனும் அந்தப் பெண்ணுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்துவிட்டு மாடியில் காயவைத்த துணிகளை எடுக்க சென்றுவிட்டாராம். 

அதன்பின்னர் கீழே வந்து பார்த்தபோது பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் பீரோவை ஆராய்ந்தபோது அதில் இருந்த 6½ சவரன் நகைகளை காணவில்லை. அப்போது வெளியில் பார்த்தால் தண்ணீர் கேட்ட பெண்ணையும் காணவில்லை. 

இதனையடுத்து பர்வீன் தனது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்து அந்த பெண்ணை தேடினார். அப்போது சிறிது தொலைவே சென்றிருந்த அந்த பெண்ணை அக்கம்பக்கத்தினர் மடக்கிப் பிடித்துவிட்டனர்.

பின்னர் அவரை விசாரித்ததில் அவர், தண்ணீர் கேட்பதுபோல நடித்து நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை விராலிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த பெண் மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த பிரபு மனைவி செல்வி (30) என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த நகைகளையும் பறிமுதல் செய்தனர்.