Asianet News TamilAsianet News Tamil

கருப்பு கொடியை பறக்கவிட்டு அதிகாரிகளை தெறிக்கவிட்ட கிராம மக்கள்;  பசுமை சாலைக்கு வலுக்கும் எதிர்ப்புகள்...

village people show black flag for green way road authorities return
village people show black flag for green way road authorities return
Author
First Published Jul 3, 2018, 8:34 AM IST


தருமபுரி

பசுமை சாலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வீடுகள், விவசாய நிலங்களில் கிராம மக்கள் கருப்புக் கொடியை கட்டி பறக்கவிட்டுள்ளனர். இதனால் நில அளவீடு செய்யவந்த அதிகார்கள் திரும்பி சென்றனர்.

சேலம் - சென்னை இடையே எட்டு வழி பசுமைச் சாலை ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த பாதை தர்மபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வழியாக போகிறது. இந்த பாதையால் விவசாய நிலங்கள், வீடுகள், பள்ளிகள் போன்றவை பாதிக்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்காக விவசாய நிலங்கள், வீடுகள், பள்ளிகள் கையகப்படுத்துவதற்கும், நிலம் அளவீடு செய்வதற்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள் நிலங்கள், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தங்களது கடும் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். மேலும், பல்வேறு இடங்களில் விவசாயிகள் தீக்குளிக்கவும் முயன்றனர். 

எனினும் காவல் பாதுகாப்புடன் மிரட்டி நிலங்களை அளவீடு செய்கின்றனர் அதிகாரிகள். தற்போது வருவாய்த்துறை மூலம் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்படுகிறது. தென்னை மரங்கள், கிணறுகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அரூர் அருகே உள்ள மாலகப்பாடி உள்பட ஐந்து இடங்களில் தனிநபர் நிலம் ஆய்வு செய்வதற்கு நேற்று அதிகாரிகள் சென்றனர். மாலகப்பாடி கிராமத்தில் பொதுமக்கள், நிலம் ஆய்வு செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, "இந்தக் கிராமத்தில் 40 வீடுகள், மூன்று கோவில்கள், 70 ஏக்கர் விவசாய நிலம் எட்டு வழி பசுமைச் சாலைக்கு கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்படுவார்கள். எனவே, எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கும் பணியை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்" என்று வலியுறுத்தினர். இதனால் அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் அங்கிருந்து திரும்பி சென்றனர். 

நிலம் அளவீடு மற்றும் ஆய்வு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வீடுகள், விளை நிலங்கள், சாலையோரம் கறுப்புக்கொடி கட்டி தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios