Asianet News TamilAsianet News Tamil

PMGSY திட்டமும் MGSMT திட்டமும் ஒன்றல்ல: தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு..!

PMGSY திட்டமும் MGSMT திட்டமும் ஒன்றல்ல என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது

TN govt Fact check team says that PMGSY and MGSMT scheme are not same smp
Author
First Published Feb 23, 2024, 4:13 PM IST | Last Updated Feb 23, 2024, 4:13 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 22ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தொடரின் போது, பிப்ரவரி 19ஆம் தேதியன்று 2024-2025ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

ஆனால், தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் மத்திய அரசின் திட்டத்தின் பெயரை மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். அந்த வகையில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு, கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும், பிரதமரின் கிராமச் சாலை திட்டம், முதல்வரின் கிராமச் சாலை திட்டமாக உருமாறியிருக்கிறது எனவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், PMGSY திட்டமும் MGSMT திட்டமும் ஒன்றல்ல என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. “மத்திய அரசின் 'பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (PMGSY)' திட்டத்துக்கு மாநில அரசு முதல்வரின் ‘கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம்(MGSMT)' என்று பெயர் கொடுத்து புதிய திட்டமாக அறிமுகம் செய்துள்ளது” என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது வதந்தி.” என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது.

 

 

இதுகுறித்து இரு திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளித்து தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு கூறியிருப்பதாவது: “முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டமானது (MGSMT), கிராமங்களை தரமான சாலைகள் மூலம் இணைப்பது, கிராமங்களில் சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது ஆகியவையே இத்திட்டம். மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளில் வருமானம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக பொருளாதார காரணிகளைக் கொண்டு MGSMT திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மாநில அரசின் நிதியாம் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது.” என கூறப்பட்டுள்ளது.

அதேபோல், “பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டமானது (PMGSY), மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைந்துள்ள சாலைகளுடன் குக்கிராமங்கள் மற்றும் மலைக் கிராம சாலைகளை தார் சாலைகள் மூலம் இணைப்பதே PMGSY திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் சாலைகளை அமைக்க 60% மத்திய அரசும், 40% மாநில அரசும் நிதி ஒதுக்கீடு செய்கிறது.” எனவும் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது.

திமுக தேர்தல் அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ் - கனிமொழி எம்.பி. சொன்ன தகவல்!

மேலும், “PMGSY அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே தமிழ்நாடு தொடர்ந்து கிராமப்புற சாலைகளை மேம்படுத்த பெரும் நிதியை முதலீடு செய்துள்ளது. எனவே, ஒன்றிய அரசின் PMGSY திட்டமும், மாநில அரசின் MGSMT திட்டமும் வெவ்வேறானவை.” என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னதாக, பிரதமர் வீடு கட்டும் திட்டம் குறித்தும் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்திருந்தது. அதில், “பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் என்பது ரூ.1.2 லட்சம் வழங்கும் திட்டம் ஆகும். இதில் ரூ.72 ஆயிரம் மத்திய அரசும், ரூ.48 ஆயிரம் தமிழ்நாடு அரசும் வழங்குகின்றன. மத்திய அரசு வழங்கும் தொகை போதாது என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு கான்கிரீட் கூரை அமைப்பதற்காக கூடுதலாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வழங்குகிறது. ஆக இந்த திட்டத்தில் மொத்தம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் ஒரு பயனாளிக்கு வழங்கப்படுகிறது. இதில் தமிழ்நாடு அரசு 70 சதவீத தொகையை வழங்குகிறது. மத்திய அரசு 30 சதவீதம் மட்டுமே தருகிறது.

 

 

'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில் முதல் கட்டமாக 1 லட்சம் வீடுகள் தலா ரூ.3.50 லட்சம் செலவில் இந்த ஆண்டில் கட்டப்படும். தமிழ்நாடு அரசே ஒட்டுமொத்த நிதியையும் வழங்கும். கிராமப்பகுதிகளில் ஏழை-எளிய மக்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம் (கலைஞர் கனவு இல்லம்) இதுவாகும். 2-30ஆம் ஆண்டிற்குள் குடிசைகள் இல்லா தமிழ்நாடு என்ற இலக்குடன் மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்டி தரப்பட இருக்கின்றன. பயனாளிகளுக்கு வீடு கட்ட நிலம் இல்லாவிடில், நிலத்தையும் அரசே வழங்குகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios