Ind Vs Ban: யாரு ஏரியால யாரு சீன போடுறது? வங்கதேசத்தை பொளந்துகட்டும் அஸ்வின், ஜடேஜா
வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 6வது சதத்தை பூர்த்தி செய்தார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முன்னதாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேசம் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் 2 - 0 என்ற கணக்கில் அதன் சொந்த மண்ணில் வங்கதேசம் வொயிட் வாஷ் செய்தது. அதே புத்துணர்ச்சியுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தானைப் போன்று இந்தியாவையும் வென்று காட்டுவோம் என்று அந்த அணி வீரர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இரு அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ரோகித் ஷர்மா 6 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைப் போன்றே அடுத்தடுத்து வந்நத சுப்மன கில், விராட் கோலி முறையே 0, 6 ரன்கள் எடுத்து மைதானத்தை விட்டு வெளியேறினர்.
சற்று நம்பிக்கையுடன் ஆடிய ஜெய்ஸ்வால் 118 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 144க்கு 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்கு சென்றது. வங்கதேச வீரர்கள் தாங்கள் சொன்னதை செய்து காட்டிவிட்டார்களோ என்ற அச்சம் இந்திய ரசிகர்களுக்கு எழுந்தது. அப்போது 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஜோடி பொறுப்புடன் ஆடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.
விக்கெட்டுகள் மளமளவென சரிந்தாலும் எந்தவித பதற்றத்தையும் வெளிப்படுத்தாத சென்னை நாயகன் அஸ்வின் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தனார். தொடர்ந்து அதிரடி காட்டிய அஸ்வின் 61 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து ஜடேஜாவம் தனது 21வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து வேகம் குறையாத அஸ்வினும், ஜடேஜாவும் வங்கதேசத்தினரின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தனர்.
அஸ்வின் 108 பந்துகளில் 100 ரன்கள் (10 போர், 2 சிக்ஸ்) கடந்து சர்வதேச கிரிக்கெட்டில் தனது 6வது சதத்தை பூர்த்தி செய்தார். ஜடேஜா 108 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்துள்ளார். முதலாவது ஆட்ட நேர முடிவில் அஸ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
வங்கதேசம் சார்பில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹமுத் 4 விக்கெட்களும், நிஹித் ரானா, ஹசன் மிராஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.