TNPSC Group 2 தேர்வு: ஆளுநரை வம்புக்கு இழுக்கும் தமிழக அரசு? சர்ச்சை கேள்வியால் பரபரப்பு
இன்று நடைபெற்ற தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வில் ஆளுநரின் அதிகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்வியால் சர்ச்சை வெடித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2ஏ போட்டி தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியானது. ஜூலை 19ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் தேர்வுகள் இன்று நடைபெற்றன. உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர் நிலை 2, தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்ளிட்ட 507 பணியிடங்களுக்கும்,
உங்களுக்கே உங்களை அடையாளம் தெரியலயா? ஆதாரில் உங்கள் புகைப்படத்தை மாற்ற ஈசி டிப்ஸ் இதோ
குரூப் 2ஏவில் உதவி ஆய்வாளர், உதவியாளர், வருவாய் உதவி ஆய்வாளர் கணக்கர் உள்ளிட்ட 1820 பணியிடங்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கு மாநிலம் முழுவதும் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், 5 லட்சத்து 81 ஆயிரத்து 035 நபர்கள் இன்று நடைபெற்ற தேர்வை எழுதி உள்ளனர்.
இந்நிலையில் குரூப் 2 தேர்வின் வினாத்தாளின் பொது அறிவு பகுதியில், ஆளுநர் அதிகாரம் குறித்த கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வினாத்தாளில் 90வது கேள்வியாக இடம்பெற்றுள்ள அக்கேள்வியில்,
கூற்று A. இந்திய கூட்டாட்சியில் ஆளுநர் அரசின் தலைவர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என்னும் இருவிதமான பணிகளை செய்கிறார்.
காரணம் (R). ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது.
A. கூற்று (A) சரி ஆனால் காரணம் (R) தவறானது.
B. கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி. மேலும் கூற்று (A)க்கான சரியான விளக்கமாக காரணம் (R) உள்ளது.
C. கூற்று (A) தவறானது. ஆனால் காரணம் (R) சரி.
D. கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, ஆனால் கூற்று (A) க்கான சரியான விளக்கமாக காரணம் (R) இல்லை.
E. விடை தெரியவில்லை. என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும் ஆளுநர் தமிழக அரசின் செயல்பாடுகள், திமுக.வின் கொள்கைகள், மாநில பாடத்திட்டம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து விமர்சித்து வருவது தமிழக அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வில் ஆளுநர் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.