செல்போனில் இருப்பது தமது குரல் தான் என பேராசிரியை நிர்மலா தேவி ஒப்புதல் அளித்துள்ளார். சென்னையில் நடந்த குரல் மாதிரி சோதனையின் போது நிர்மலா தேவி ஒப்புக்கொண்டுள்ளார். செல்போனில் பதிவான குரல் நிர்மலா தேவி குரல் தான் என தடய அறிவியல் துறையினர் உறுதி செய்துள்ளனர். நிர்மலா தேவியின் குரல் மாதிரி பரிசோதனை அறிக்கை சிபிசிஐடி போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக கூறி அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.  இந்நிலையில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிர்மலா தேவிக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது.இதையடுத்து, நிர்மலா தேவிக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் இன்று குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது அவர் மாணவிகளிடம் எவ்வாறு போனில் பேசினாரோ அதுபோன்று பல விதங்களில் பேச வைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நிர்மலா தேவியை மீண்டும் மதுரை அழைத்து சென்று சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.